500 கோடி முறை பெண்கள் பயணம் உலக சாதனை புத்தகத்தில் சக்தி திட்டம்
பெங்களூரு: கர்நாடக அரசின், ஐந்து வாக்குறுதி திட்டங்களில் ஒன்றான 'சக்தி' திட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, நேற்று அளித்த பேட்டி: மாநில அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களில், சக்தி திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். 2023 ஜூன் 11 முதல் 2025 ஜூலை இறுதி வரை, நான்கு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும், பெண்கள் 500 கோடி முறைக்கும் மேல் இலவசமாக பயணித்துள்ளனர். இதன் பயனாக சக்தி திட்டம், 'கோல்டன் புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெண்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட திட்டம், உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது, பெருமையான விஷயமாகும். பெண்களுக்கு இலவச பஸ் போக்குவரத்து வசதி செய்யும், நாட்டின் பத்து நகரங்களில், ஆய்வு செய்யப்பட்டது. பெங்களூரில் 23 சதவீதம், ஹூப்பள்ளி - தார்வாடில் 21 சதவீதத்துக்கும் அதிகமான பெண் ஊழியர்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கின்றனர் என, ஆய்வறிக்கை கூறியுள்ளது. கர்நாடகாவின் சக்தி திட்டத்தை, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வேறு பெயர்களில், சில மாற்றங்களுடன் செயல்படுத்தியுள்ளன. இது எங்கள் அரசின் திட்டத்துக்கு கிடைத்த வெற்றிக்கு சாட்சியாகும். இதற்கு காரணமான நான்கு போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான்கு போக்குவரத்து கழகங்களின் பஸ்களில், தினமும் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பயணிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.