சிவகுமார் முதல்வர் ஆவார்: ரங்கநாத் துணை முதல்வர் பகிரங்க எச்சரிக்கை
பெங்களூரு: ''துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆவார்,'' என, குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் கூறி உள்ளார். ஆயினும், ''இது குறித்து யாரும் பேசினால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று ரங்கநாத் அளித்த பேட்டி: அரசியல் விவசாயம் போன்றது. எவ்வளவு முயற்சி செய்கிறோமோ, அந்த அளவு சிறப்பான விளைச்சல் கிடைக்கும். கடின உழைப்பில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றதற்கு, துணை முதல்வர் சிவகுமாரின் முயற்சி, உழைப்பு தான் காரணம். இதை கட்சி மேலிடம் பரிசீலிக்க வேண்டும். அவருக்கு உரிய நேரத்தில் பதவி வழங்க வேண்டும். சிவகுமார் ஒரு நாள் கண்டிப்பாக முதல்வர் ஆவார். அவர் உதிக்கும் சூரியன் போன்றவர்; தேசிய தலைவர். மத்திய அமைச்சர் குமாரசாமியும், அவரது குடும்பத்தினரும் என்ன செய்தாலும் அது சிறப்பானது. மற்றவர்கள் என்ன செய்தாலும் அதில் குறை கண்டுபிடிக்கின்றனர். குனிகல்லை, பெங்களூரு தெற்கு தொகுதியுடன் இணைக்கும்படி கேட்டதால், அரசியல் ரீதியாக குமாரசாமி என்னை விமர்சிக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளால் நான் வருத்தம் அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். எச்சரிக்கை பெங்களூரில் நேற்று சிவகுமார் அளித்த பேட்டி: காங்கிரஸ் அரசின் அதிகார பகிர்வு குறித்து, யாரும் பேச கூடாது. அவ்வப்போது இதை பற்றி பேசி, அரசு மற்றும் கட்சியின் இமேஜுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால், நோட்டீஸ் அளித்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன். அதிகார பகிர்வு குறித்து பேச, யாருக்கும் உரிமை இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. முதல்வர் சித்தராமையா ஏற்கனவே, தெளிவாக கூறியுள்ளார். அவரது பேச்சே இறுதியானது. இதை பற்றி அதிகம் பேசினால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு, முதல்வர் சித்தராமையா கட்டுப்படுவார். நானும் மேலிடம் கூறியபடி நடந்து கொள்வேன். எங்களுக்கு கட்சியே முக்கியம். தனி நபர்கள் அல்ல. அதிகார பகிர்வு தொடர்பாக, எனக்கு ஆதரவாகவோ அல்லது முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாகவோ பேசினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.