நிலம் வாங்கிய ஆவணங்கள் இருக்க வேண்டாமா? மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு ஐகோர்ட் கேள்வி
பெங்களூரு : 'நிலம் வாங்கி இருந்தால், ஆவணங்கள் இருக்க வேண்டாமா?' என, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு, ராம்நகர் பிடதி கேத்தமாரனஹள்ளியில் உள்ளது. இந்த வீட்டை சுற்றியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக, குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்தது. நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, குமாரசாமிக்கு ராம்நகர் தாசில்தார் 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து குமாரசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தாசில்தார் அனுப்பிய நோட்டீசிற்கு தடை விதித்தது. இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் டி.கே.சிங், ராஜேஷ் ராய் அமர்வு விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதாடுகையில், ''பிரதிவாதி நிலத்தை வாங்கவில்லை. அது அரசு நிலம். நில வருவாய் சட்டத்தின் கீழ் ஆட்சேபனைக்குரிய நிலம் தொடர்பான, ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பிரதிவாதி பதில் அளிக்கவில்லை. கேத்தமாரனஹள்ளியில் தனக்கு 22 ஏக்கர் நிலம் இருப்பதாக அவர் கூறுகிறார். கிரய பத்திரம் மூலம், 13 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். 6.06 ஏக்கர் நிலத்திற்கு எந்த ஆவணமும் இல்லை. ஆவணத்தை அவர் சமர்ப்பித்தால், விசாரணையை அரசு கைவிடும்,'' என்றார். குமாரசாமி தரப்பு மூத்த வக்கீல் உதய் ஹொல்லா வாதிடுகையில், ''என் மனுதாரர் மீது அவரது அரசியல் எதிரி மாதேகவுடா, பொய் வழக்கு தொடர்ந்தார். அந்த புகார் அடிப்படையில் லோக் ஆயுக்தா விசாரணை நடந்தது. விசாரணையில் எந்த அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தெரிந்தது. ஆனாலும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்தது சட்டவிரோதமானது,'' என்றார். நீதிபதிகள் கூறுகையில், 'நிலத்தை பணம் கொடுத்து வாங்கி இருந்தால், அதற்கான ஆவணங்கள் பிரதிவாதியிடம் இருக்க வேண்டாமா; அந்த நிலம் யாருக்கு உரியது என்பதை, தாசில்தார் சரிபார்க்க வேண்டாமா?' என கேள்வி எழுப்பினர். மேலும், இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, கலெக்டருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.