ஜாதிவாரி அறிக்கை அமல்படுத்துவதில் சித்தராமையா... தவிப்பு! கார்கே, ராகுலுடன் ஆலோசித்து முடிவெடுக்க திட்டம்
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால், கணக்கெடுப்பு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் சித்தராமையாவிடம், பிற்படுத்தப்பட்ட சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர்.நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதில் ஆர்வம் காண்பித்தார்.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி சித்தராமையாவிடம் கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து 2023ல் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மைசூரு மண்டலம்
கடந்த 3ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அறிக்கையை அமலுக்கு கொண்டு வர, ஒக்கலிகர், லிங்காயத் அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.வரும் 3ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் இதை அமல்படுத்தக்கூடாதென முதல்வருக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.லிங்காயத் சமூகத்தினர் எப்போதும் பா.ஜ.,வை தான் ஆதரித்து வந்தனர். ஆனால் '2ஏ' இடஒதுக்கீடு விஷயத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை ஆதரித்தனர். இதனால் வடமாவட்டங்களில் எதிர்பாராத வெற்றியை காங்கிரஸ் பெற்றது. தேன் கூட்டில் கல்
அதுபோல சிவகுமார் முதல்வர் ஆவார் என்ற ஆசையில், மைசூரு மண்டலத்தில் காங்கிரசை ஒக்கலிகர்கள் ஆதரித்திருந்தனர்.ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்தினால், இந்த இரண்டு சமூகங்களின் எதிர்ப்பை காங்கிரஸ் சந்திக்க நேரிடும் என்ற அச்சம், காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.'தேன் கூட்டில் கல்லை வீசி எறிந்து தேனீக்களிடம் கொட்டு வாங்குவது' போல, ஜாதிவாரி கணக்கெடுப்பு முதல்வருக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. சோனியாவிடம் முறையீடு
துணை முதல்வர் சிவகுமார் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் அறிக்கையை அமல்படுத்த கண்டிப்பாக எதிர்ப்புத் தெரிவிப்பார். சோனியாவிடம் சென்று அவர் முறையிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இதுபோல ராகுலுக்கு நெருக்கமான சில லிங்காயத் அமைச்சர்களும், தங்கள் பங்கிற்கு முறையிட்டு, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு முட்டுக்கட்டை போடலாம் என்று கூறப்படுகிறது.இதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அமைச்சர்களான முனியப்பா, ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் மேலிடத்திற்கு அழுத்தம் தரலாம் என்றும் கூறப்படுகிறது.அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தலாம் என்று கணக்குப் போட்டவருக்கு, இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. விழிபிதுங்கி நிற்கிறார். இதனால் வேறு வழியின்றி, இந்த பிரச்னையை காங்கிரஸ் மேலிடத்திடம் திருப்பிவிட பார்க்கிறார்.அதாவது ஜாதிவாரி அறிக்கையை அமல்படுத்தினால் என்ன பிரச்னை, அமல்படுத்தாவிட்டால் என்ன பிரச்னை என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் எடுத்துக்கூற உள்ளார்.அவர்கள் இருவரும் என்ன சொல்கின்றனரோ அதன்படி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தன்னிடம் உள்ள பந்தை, காங்கிரஸ் மேலிடத்திடம் விட்டு விட்டு தப்பித்துக் கொள்ளும் முடிவுக்கு முதல்வர் சித்தராமையா வந்துவிட்டார்.