அதிகாரத்துக்காக மற்றவரை மிதித்தவர் சித்தராமையா; பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
பெங்களூரு: ''மற்றவருக்காக அதிகாரத்தை தியாகம் செய்தவர் தேவராஜ் அர்ஸ். அதிகாரத்துக்காக மற்றவரை மிதித்தவர் சித்தராமையா. இருவரையும் ஒப்பிடுவதே முட்டாள்தனம்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சில தவிர்க்க முடியாத காரணங்களால், காங் கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வராக ஒப்புக்கொண்டது. ஆனால், அதற்காக ஆட்சி காலம் முழுதும், அவரே முதல்வர் என, கூறவில்லை. தற்போது கையில் சுத்தியல் வைத்து கொண்டு, காங்., மேலிடம் அமர்ந்துள்ளது. சரியான நேரம் வரும் போது அடிக்கும். சுயநலம் சித்தராமையாவுக்கு நன்றி என்பதே கிடையாது. தன்னை வளர்த்தவர்களை ஒழித்து கட்டுவதே, அவரது கொள்கை. இதுவரை அவர் யாரை தலைவராக வளர்த்தார். சுயநலம் கொண்டவர். அதிகார போதை தலைக்கேறியுள்ளது. சித்தராமையா தலைவர் என்பதால், அஹிந்தா சமுதாயத்தினர் காங்கிரசுக்கு ஓட்டு போடவில்லை. அந்த சமுதாயத்தினர் எப்போதும் அக்கட்சிக்கு ஆதரவாக நின்றுள்ளனர். நாளை சித்தராமையா இல்லையென்றாலும், அந்த சமுதாயத்தின் ஓட்டுகள், காங்கிரசுக்கு வரும். சிலர் தங்களின் பதவியை தக்க வைத்துக்கொள்ள, சித்தராமையாவின் தலைமையை புகழ்கின்றனர். முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சின் சாதனையை, சித்தராமையா முறியடித்ததாக பாராட்டுகின்றனர். தேவராஜ் அர்சின் சாதனையை முறியடிக்க முடியுமா. கர்நாடகாவில் அப்படிப்பட்ட தலைவர் பிறந்து வரவே முடியாது. சித்தராமையா எங்கே, அர்ஸ் எங்கே. தியாகம் மற்றவருக்காக அதிகாரத்தை தியாகம் செய்தவர் தேவராஜ் அர்ஸ். அதிகாரத்துக்காக மற்றவரை மிதித்தவர் சித்தராமையா. இருவரையும் ஒப்பிடுவதே முட்டாள்தனம். இது யானைக்கும், எறும்புக்கும் உள்ள வித்தியாசம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நியாயம் கிடைக்க செய்ய, அன்று தேவராஜ் அர்ஸ், அனைவரையும் பகைத்து கொண்டு, ஹாவனுார் அறிக்கையை செயல்படுத்தினார். இதனால் சிறு, சிறு சமுதாயங்களுக்கும் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கிடைத்தது. இன்று பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் வீடுகளில் இருந்து கலெக்டர், தாசில்தார், அதிகாரிகள் வந்துள்ளனர் என்றால், அதற்கு காரணம் தேவராஜ் அர்ஸ். சித்தராமையா, முதன் முறை முதல்வரான போது பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மூலம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினார். அந்த அறிக்கையை சித்தராமையா வெளியிடவே இல்லை. அறிக்கையை குப்பை கூடையில் போட்டார். இப்படிப்பட்டவர் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை பற்றி பேசுவது, நகைப்புக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.