ஜாதிவாரி கணக்கெடுப்பு சுனாமியில் சித்தராமையா அடித்து செல்லப்படுவார்
பெங்களூரு : ''ஜாதிவாரி கணக்கெடுப்பு சுனாமியில், முதல்வர் சித்தராமையா அடித்து செல்லப்படுவார்,'' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.'எக்ஸ்' வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:விவேகமற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை விஷயத்தில், மக்களின் கோபம் சரிதான். பூனை கண்களை மூடிக்கொண்டு பால் குடித்தால், உலகத்துக்கு தெரியாதா. ஜாதி கணக்கெடுப்பு பெயரில், காங்கிரஸ் அரசு மக்களை பிரித்து, மாநிலத்தின் நிம்மதிக்கு கொள்ளி வைத்து, அந்த நெருப்பில் குளிர் காய்கிறது.அனைத்து மாநிலங்களின் தேர்தல்களில் வெற்றி பெற, காங்கிரஸ் ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை அஸ்திரமாக்குகிறது. குலம், குலம் என அடித்து கொள்ளாதீர்கள். உங்களின் குலம் எதுவென்று தெரியுமா என, கனகதாசர் கேள்வி எழுப்பினார். முதல்வருக்கு இது தெரியாதா. கனகதாசரின் கொள்கை அர்த்தமுடையது.சித்தராமையா உத்தரவுப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவர் சொல்வது ஒன்று, செய்வது வேறு ஒன்றாகும். இவரது அராஜகத்துக்கு ஒரு எல்லை வேண்டாமா. சமூக நியாயம் என்றால் இவருக்கு வேண்டாத வார்த்தையாகும். சமூக நியாயம் என்றால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை திருப்திப்படுத்துவதா.அரசியல் லாபத்துக்காக ஜாதிகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்துகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் லாபம் சித்தராமையாவுக்கா அல்லது இவருக்கு அரசியல் அடைக்கலம் அளித்த காங்கிரசுக்கா. சித்தராமையாவின் உள் மர்மம் ராகுலுக்கு புரிந்ததாக தெரியவில்லை.இதற்கு முன் வீரேந்திர பாட்டீலுக்கு செய்த அநியாயத்துக்கு, இவரது கட்சி தகுந்த விலை கொடுத்தது நினைவில்லையா. இவரது கட்சியின் வரலாற்றால் பாடம் கற்கவில்லை. தவறை திருத்தி கொள்ளும் குணம், சித்தராமையாவிடம் இல்லை. அவரது கட்சிக்கும் இல்லை. நிம்மதியாக இருந்த கர்நாடகாவை சீண்டியுள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு சுனாமியில், இவர் அடித்து செல்லப்படுவார்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.