உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இன்ஜி.,க்கள் இடமாறுதல் விவகாரத்தில் சித்து, சிவகுமார் மோதல்! தலைமை செயலருக்கு துணை முதல்வர் பரபரப்பு கடிதம்

இன்ஜி.,க்கள் இடமாறுதல் விவகாரத்தில் சித்து, சிவகுமார் மோதல்! தலைமை செயலருக்கு துணை முதல்வர் பரபரப்பு கடிதம்

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., அரசு நடக்கிறது. கடந்த 2023ல் அரசு அமைந்ததும் அமைச்சர்கள் - எம்.எல்.ஏ.,க்கள் இடையில், அதிகாரிகள் இடமாறுதல் விவகாரத்தில் பிரச்னை வெடித்தது. அதிகாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு இடமாறுதல் வழங்குவதாக, ம.ஜ.த., தலைவரான குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.சித்தராமையாவின் மகன் யதீந்திரா அதிகாரிகள் இடமாறுதல் விஷயத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், அதிகாரிகள் இடமாறுதல் விவகாரத்திற்கு அரசு பிரேக் போட்டது. இந்நிலையில் தற்போது இன்ஜினியர்கள் இடமாறுதல் விவகாரத்தில், சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

என் அனுமதி

சிவகுமார் வசம் உள்ள நீர்பாசனத் துறையில் பணியாற்றி வந்த, மூத்த இன்ஜினியர்கள் ராமேந்திரா, விநாயக் சுகூர், யதீஷ் சந்திரா, சிவானந்தா ஆர்.நாயக், பிரகாஷ் ஆகியோரை பொதுப்பணித் துறைக்கு பணி இடமாற்றம் செய்து, கடந்த 9ம் தேதி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் உத்தரவிட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 13ம் தேதி அரசின் தலைமை செயலர் ஷாலினிக்கு சிவகுமார் எழுதிய கடிதத்தில், 'எனது அனுமதியின்றி எனது துறையில் இருந்து, ஐந்து இன்ஜினியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அரசு அமைந்த போதே, என் துறை அதிகாரிகளை மாற்றும் முன்பு என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டு இருந்தேன்.'என் உத்தரவை மீறி இன்ஜினியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை திரும்ப பெற வேண்டும். இனி எனது அனுமதியின்றி எனது துறை அதிகாரிகளை மாற்ற கூடாது' என்று தெரிவித்துள்ளார்.

அழுத்தம்

நிர்வாக சீர்திருத்த ஆணையம், முதல்வர் சித்தராமையாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல்வர் கூறினால் தான் துறைகளின் அதிகாரிகளை, சீர்திருத்த ஆணையம் பணியிட மாற்றம் செய்யும். முதல்வர் உத்தரவின்படியே, சிவகுமார் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் முதல்வரை எச்சரிக்கும் விதமாக, தலைமை செயலருக்கு, சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார்.இதுகுறித்து சிவகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''என் துறை இன்ஜினியர்களை பணியிட மாற்றம் செய்தது தொடர்பாக, தலைமை செயலருக்கு நான் கடிதம் எழுதியது உண்மை தான். நீர்பாசனத் துறை இன்ஜினியர்கள் டெபுடேஷன் பணிக்காக, மற்ற துறைக்கு செல்கின்றனர். மறுபடியும் இங்கு வருவது இல்லை. ''நீர்பாசனத்துறை மூலம் நிறைய பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இன்ஜினியர்கள் இல்லாமல் பணிகளை எப்படி செய்ய முடியும். இதனால் தான் எனது அனுமதியின்றி இன்ஜினியர்களை மாற்ற வேண்டாம் என்று கூறி உள்ளேன். தாங்கள் கேட்கும் துறைகளுக்கு இன்ஜினியர்களை மாற்றும்படி, எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்தும் எனக்கு அழுத்தம் வருகிறது,'' என்றார்.

கணவன் - மனைவி

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'எக்ஸ்' பதிவில், 'சித்தராமையா, சிவகுமார் இடையில் அதிகாரத்திற்கான மோதல் துவங்கி உள்ளது. முதல்வர் பதவி கைமாறும் தருணத்தில், இருவருக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடையும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளது.'கணவன் - மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டையில் குழந்தை பாதிக்கப்படுவது போல, இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டையால் கர்நாடகாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.விஜயேந்திரா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களும், முதல்வர், துணை முதல்வர் இடையிலான அதிகார மோதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை