உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நகைகளை சகோதரிகளுக்கு கொடுத்த தாயை கொலை செய்த மகன் கைது

நகைகளை சகோதரிகளுக்கு கொடுத்த தாயை கொலை செய்த மகன் கைது

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி நகரின், பிரம்மகிரி காலனியில் வசிப்பவர் மல்லப்பா, 83. இவரது மனைவி நிங்கவ்வா, 78. தம்பதிக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்கள், மகன் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். மல்லப்பாவும், நிங்கவ்வாவும் தனி வீட்டில் வசித்தனர். நவம்பர் 4ம் தேதி நள்ளிரவு, மல்லப்பா வீட்டின் வெளியிலும், அவரது மனைவி நிங்கவ்வா வீட்டுக்குள்ளும் உறக்கத்தில் இருந்தனர். மறுநாள் காலை மல்லப்பா, வீட்டுக்குள் சென்று பார்த்த போது, நிங்கவ்வா அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மல்லப்பா, தன் மகன் அசோக், 55, கிடம் கூறினார். அதன்பின் வித்யாநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். வீட்டின் பின் வாசல் வழியாக வந்த மர்ம நபர்கள், என் தாயை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக அசோக் கூறினார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். ஹூப்பள்ளி - தார்வாட் போலீஸ் நகர கமிஷனர் சசிகுமார், சம்பவ இடத்தை பார்வையிட்டார். மோப்ப நாய், தடயவியல் வல்லுநர்கள் வீட்டை ஆய்வு செய்தனர். போலீசார், நிங்கவ்வாவின் மகள்களிடம் விசாரித்த போது, தங்களின் சகோதரன் அசோக் மீது, சந்தேகம் தெரிவித்தனர். இதன்படி அவரை தீவிரமாக விசாரித்ததில், தாயை கொன்றதை ஒப்புக்கொண்டார். ஓராண்டுக்கு முன், நிங்கவ்வா 30 கிராம் தங்க நகைகளை அணிந்திருந்தார். இந்த நகைகள் மீது, அசோக் கண் வைத்திருந்தார். ஆனால் தங்களை கவனிக்காத, உணவளிக்காத மகனுக்கு நகைகளை தர விரும்பாத நிங்கவ்வா, மகள்களுக்கு கொடுத்தார். இது மகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரது பெயரில் இருந்த மனையையும், மகள்களுக்கு கொடுக்க முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அசோக், தாயை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். சம்பவ நாளன்று இரவு, பின் வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து, கனமான மரக்கட்டையால் தாயை தாக்கி கொலை செய்தது, விசாரணையில் தெரிந்தது. அசோக் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !