30ல் பெங்களூரில் தென் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள் மாநாடு
பெங்களூரு: “இம்மாதம் 30ம் தேதி, பெங்களூரில் தென் மாநிலங்களின் நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடத்த, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் அளித்துள்ளார்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் வரும் 30ம் தேதி, தென் மாநிலங்களின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடக்கவுள்ளது. இதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய மாநாட்டில், மாநிலத்தின் கோரிக்கைகளை, மத்திய அரசிடம் தெரிவிப்போம். ஏற்கனவே பல முறை மத்திய அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்து, நிதியுதவி கோரியுள்ளோம். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லையில் சேர்க்க, தகுதியான உள்ளாட்சி பகுதிகளை பார்வையிட்டேன். பி.எஸ்.பாட்டீல் கமிட்டி மூலம், ஜி.பி.ஏ., எல்லைக்குள் சேர்க்கக் கூடிய பகுதிகளை பற்றி, அறிக்கை தயாராகிறது. இந்த விஷயமாக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பொது மக்கள், சங்கங்கள், அமைப்புகளுடன் ஆலோசிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். ஐ.டி., நிறுவனங்களுடன் ஆலோசிப்பேன். பெங்களூரு மாநகராட்சிகளுக்கு வெளியே, 25 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்களை மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்க வேண்டும். எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட் பீல்டு, விமான நிலைய சாலை, எலஹங்காவின் சில பகுதிகள், இன்னும் பஞ்சாயத்து எல்லையிலேயே உள்ளன. சில பகுதிகளில் குப்பை அள்ளுகின்றனர். சில இடங்களில் அள்ளுவது இல்லை. ஏன் என கேட்டால், இந்த பகுதிகள் பஞ்சாயத்து எல்லையில் உள்ளதாக, துாய்மை பணியாளர்கள் கூறுகின்றனர். ஜி.பி.ஏ.,வில் சேர்க்க வேண்டிய பகுதிகளை, வரைபடத்தில் பார்ப்பதை விட, நேரில் பார்க்க வேண்டும் என, அந்தந்த பகுதிகளுக்கு நேரில் செல்கிறேன். அதிகாரிகள் மேற்பார்வையில், சாலைகளின் பள்ளங்கள் மூடப்படுகின்றன. மழை நிற்பதற்காக காத்திருக்கிறோம். அதன்பின் சாலைப் பள்ளங்கள் மூடும் பணி தீவிரமடையும். இவ்வாறு அவர் கூறினார்.