37 மசோதாவுக்கு ஒப்புதல் சபாநாயகர் காதர் தகவல்
பெங்களூரு: மழைக்கால சட்டசபை கூட்டத்தொடரில் 37 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் காதர் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஆக., 11ம் தேதி துவங்கி ஆக., 22ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 71 மணி நேரம் 1 நிமிடம் நடந்து உள்ளது. 2025 - 26ம் ஆண்டுக்கான பல நிலைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க, 21ம் தேதி முதல்வருக்கு அதிகாரம் அளித்தது. சட்டசபையில் 39 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 37 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கர்நாடகா கூட்டம் கட்டுப்படுத்துதல், கர்நாடகா நில வருமானம் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இவை இரண்டும் மதிப்பாய்வு செய்வதற்காக ஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தொடரில், 21 அறிவிப்புகள், நான்கு அவசர சட்டங்கள், 142 ஆண்டு அறிக்கைகள், 2,306 கேள்விகள் ஏற்பு, 135 நட்சத்திர கேள்விகளுக்கு 128 கேள்விகளுக்கு பதில் வழங்கல், 383 கவன ஈர்ப்பு தீர்மானங்களில், 128 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீபத்தில் நடந்த அமர்வுகளில் பரபரப்பான கூட்டத்தொடராக இருந்துள்ளது. அரசு பள்ளிகளின் நிலை, மேம்பாடு குறித்த சிறப்பு விவதாம் அடுத்த அமர்வில் துவங்கும். ஒரு வேளை பெலகாவியில் கூட நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.