குஜராத் மாநிலம் தப்தி நதி பள்ளத்தாக்கில் துவங்கும் மேற்கு தொடர்ச்சி மலை, மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வரை, 1,600 கி.மீ.,க்கு பரவியுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இந்த மலையை பாதுகாப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை, 2013ம் ஆண்டு சமர்ப்பித்து உள்ளது. இந்த அறிக்கையில் மேற்கு தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவில் 37 சதவீதத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வேண்டும்; மலை அடிவாரத்தில் சுரங்கம், கல் குவாரி தொழில்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்; தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்க கூடாது என்பது உட்பட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்த அறிக்கையை அமல்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று கர்நாடகா, கேரளா அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த எதிர்ப்புக்கு மத்தியில், கஸ்துாரி ரங்கன் அறிக்கை பரிந்துரைகள் அடிப்படையில், மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க 2 மாத கால அவகாசம் வழங்கிஉள்ளது. 10 மாவட்டங்கள் இதுகுறித்து கர்நாடக முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி: கடந்த 21ம் தேதி எனது தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கஸ்துாரி ரங்கன் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கேட்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. கஸ்துாரி ரங்கன் அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆட்சேபனை தாக்கல் செய்ய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. அதற்குள் ஒரு நாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, அனைத்து கட்சிகளுடன் விவாதித்து, அதில் எடுக்கப்படும் முடிவை, மத்திய அரசுக்கு சமர்ப்பிப்போம். கர்நாடகாவில், 10 மாவட்டங்கள் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது. 33 தாலுகாக்களில் 1,449 கிராமங்கள் இதற்குள் வருகிறது. கஸ்துாரி ரங்கனின் அறிக்கை கல் குவாரிகள், மணல் அகழ்வு, புதிய அனல் மின் நிலையங்கள், விவசாயம், சாலை மேம்பாடு, சுற்றுலாவை பாதிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவோம். லால்பாக்கை பாதிக்காது எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், கர்நாடகாவில் ஒரு கோடிக்கும், அதிகமான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதி உள்ளேன். வறட்சி குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசித்து உள்ளேன். லால்பாக் வழியாக சுரங்கப்பாதை அமைக்க தான் பூங்காக்கள் திருத்த மசோதாவை கொண்டு வந்ததாக, எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். சுரங்கப்பாதை திட்டம் லால்பாக் பூங்காவை பாதிக்காது. பணிகள் நடக்கும் போது பூங்காவின் சில பகுதிகள் தற்காலிகமாக பயன்படுத்தப்படும். லால்பாக் மாதிரியில் பெங்களூரில் ஆறு பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கிய ஏரிகள் புனரமைக்கப்படுகின்றன. 'நைஸ்' நிறுவனத்தை 'பினாமி' பெயரில் வாங்க நான் முயற்சிப்பதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். பினாமி பெயரில் வாங்கும் திட்டம் அவருக்கு இருக்கலாம். என்னை விமர்சிக்காமல் அவரால் அரசியல் செய்ய முடியாது. தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பதாக காங்கிரஸ் அரசு மீது குமாரசாமி குற்றச்சாட்டு கூறுகிறார். அவரை அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என நினைத்தேன். ஆனால் அரசியலுக்காக வீண் பழி சுமத்துகிறார். எதிர்க்கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக போராட்டம், பாதயாத்திரை நடத்துகின்றனர். அவர்களை தடுக்க முடியாது. நாகேந்திரா மீது எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.