மேலும் செய்திகள்
பக்தர்கள் கூட்டம்
7 hour(s) ago
ஹாசன்: 'ஹாசனாம்பா கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்,' என்று, ஹாசன் கலெக்டர் லதாகுமாரிக்கு, எஸ்.பி., முகமது சுஜிதா கடிதம் எழுதி உள்ளார். ஹாசன் டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே தீபாவளியை ஒட்டி, இக்கோவில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி கடந்த 9 ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 10 ம் தேதியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 23 ம் தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. குற்றச்சாட்டு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே, அம்மனை தரிசனம் செய்ய முடியும் என்பதால், ஹாசனாம்பா கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. தினமும் மூன்று லட்சம் பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் வி.ஐ.பி., பாஸ்கள் அதிகம் வழங்கப்பட்டதால், வரிசையில் நிற்கும் பக்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு மீது குற்றம் சாட்டினர். இம்முறை அரசு மீது எந்த குற்றச்சாட்டும் வந்து விட கூடாது என்பதற்காக, ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கிருஷ்ணபைரேகவுடா, ஹாசனில் தங்கியிருந்து ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் ஹாசன் கலெக்டர் லதாகுமாரிக்கு, எஸ்.பி., முகமது சுஜிதா எழுதியுள்ள கடிதம்: தொடர் விடுமுறையால் வெளிமாவட்டங்களில் இருந்து, ஹாசனாம்பா கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. நீண்ட வரிசை வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதை நிறுத்த வேண்டும். கூட்ட நெரிசலில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், நாங்கள் பொறுப்பல்ல. கோவில் வளாகத்தில் இடம் குறைவாக உள்ளது. பக்தர்களை தடுப்புகளை தாண்டி வரிசைகளில் முன்னோக்கி செல்கின்றனர். 300, 1,000 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரிசை, கோவிலில் இருந்து நான்கு கி.மீ., துாரம் வரை நீண்டு, நகரின் பிரதான சாலைகள் வரை வந்து விட்டது. இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார். 'அசம்பாவித சம்பவம் நடக்காமல், கூட்டத்தை ஒருங்கிணைப்பது தான், போலீஸ் அதிகாரியின் பொறுப்பு. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று கடிதம் என்று சரியல்ல' என்று, பக்தர்கள் கூறி உள்ளனர்.
7 hour(s) ago