உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விமானப்படை விங் கமாண்டர் விவகாரத்தில் திடீர் திருப்பம்

விமானப்படை விங் கமாண்டர் விவகாரத்தில் திடீர் திருப்பம்

பெங்களூரு : விமானப்படை அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கால் சென்டர் ஊழியர் விகாஸ்குமாரை, விமானப்படை அதிகாரி கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு, சி.வி.ராமன் நகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., காலனியில் வசித்து வரும் விமானப்படை விங் கமாண்டர் ஆதித்யா போஸ், தன் மனைவி மதுமிதாவுடன் காரில் விமான நிலையத்திற்கு சென்றபோது, பைக்கில் வந்த ஒருவர், தன்னை தாக்கியதாகவும் மனைவியை திட்டியதாகவும் 20ம் தேதி வீடியோ வெளியிட்டிருந்தார்.ரத்தம் சொட்ட சொட்ட கன்னடர்களை பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரது மனைவியிடம் புகாரைப் பெற்று, இருசக்கர வாகன ஓட்டியான கால்சென்டர் ஊழியர் விகாஸ் குமாரை கைது செய்தனர்.

புதிய வீடியோ

இதற்கிடையில், ஆதித்யா போஸ், விகாஸ் குமாரை தாக்கி, கீழே தள்ளி உதைத்து, அவரின் கழுத்தை நெரிக்கும் வீடியோ அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.நேற்று வெளியான இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நேற்று நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:இச்சம்பவத்தில் விமானப்படை அதிகாரியின் மனைவி, பைக் பயணி விகாஸ் குமார் அளித்த புகார்கள் மீது அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

வேண்டுகோள்

பொது மக்கள் எடுக்கும் வீடியோ, படங்களை தங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட உரிமை உள்ளது. நகரின் சாலைகளில் நடக்கும் கைகலப்பு, கிரிமினல் நடவடிக்கைகள் உட்பட எந்த விஷயமானாலும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.கிரிமினல் வழக்குகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாவதால், விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது. சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கு முன்பு, போலீசாருக்கு தெரிவித்தால், விசாரணையை துவக்க வசதியாக இருக்கும்.சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள், போட்டோக்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். இல்லையெனில், சில நேரங்களில் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.இது போன்ற சம்பவங்கள் குறித்து, போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சமூக வலைதளங்களில் பகிர, பொது மக்களுக்கு உரிமையும், சுதந்திரமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில் விகாஸ்குமாரை போலீசார் ஜாமினில் விடுவித்துள்ளனர். ஆதித்யா போஸ் மீது போலீசார் கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல், அபகரித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊடகங்களுக்கு முதல்வர் 'அர்ச்சனை'

இச்சம்பவம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:சி.வி.ராமன் நகரில் நடந்த வாகனங்கள் மோதிய சம்பவத்தில், கன்னடரான விகாஸ் குமாரை, விமானப்படையின் விங் கமாண்டர் ஆதித்யா போஸ் தாக்கி உள்ளார். ஆதாரம் இல்லாமல் கன்னடர்கள், கர்நாடகாவின் மீதும் குற்றஞ்சாட்டி உள்ளார்.கன்னடர்கள், தங்கள் தாய் மொழி மீது பற்று கொண்டவர்கள்; மற்ற மொழியினரை தாக்கவோ, திட்டவோ மாட்டார்கள்.நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வருவோரை, கன்னடர்கள் மரியாதையுடன் நடத்துவர். அவர்களை உளமாற நேசிக்கின்றனர்.தேசிய ஊடகங்கள், தங்கள் பொறுப்பையும், தொழில் முறை தன்மையையும் மறந்து விடுகின்றன. யாரோ ஒருவர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டை எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்த கர்நாடகாவின் கண்ணியத்தை கெடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இது கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது.நேற்றைய சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

விட மாட்டேன்!

ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள விகாஸ் குமார், 'வீடியோ' மூலம் கூறியதாவது:என் மீது விங் கமாண்டர் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். எனக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என அனைத்து மொழிகளும் தெரியும்.எனக்கு நியாயம் கிடைக்கும் வரை, இவ்விஷயத்தை விடப்போவதில்லை. எனக்கு ஆதரவாக இருந்த முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நகர போலீஸ் கமிஷனர், கன்னட ஊடகத்தினர், கன்னட அமைப்பினர் என அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ