உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் டிராம் இயக்குவது குறித்து ஆய்வு; சிவகுமாரிடம் தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்

பெங்களூரில் டிராம் இயக்குவது குறித்து ஆய்வு; சிவகுமாரிடம் தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 'டிராம்' எனும் ரயில் இயக்குவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யும்படி, துணை முதல்வர் சிவகுமாரிடம், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தினார். பெங்களூரு, ஹெப்பால் முதல் சில்க் போர்டு வரை 18 கி.மீ., துாரத்திற்கு 18,000 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது. இந்த திட்டத்திற்கு பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். திட்டத்தையும், திட்டத்தை அமல்படுத்த நினைக்கும், துணை முதல்வர் சிவகுமாரையும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் சிவகுமாரை, தேஜஸ்வி சூர்யா நேற்று சந்தித்தார். பயன் அளிக்காது சுரங்கப்பாதை திட்டம் ஏன் பெங்களூரு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான தீர்வு ஆகாது என்பது தொடர்பாக, தன் கையடக்க கணினியில் இருந்த பரிந்துரைகளை சிவகுமாரிடம், தேஜஸ்வி சூர்யா காண்பித்தார். இதுதொடர்பான அறிக்கையையும் கொடுத்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: சுரங்கப்பாதை நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்காக மட்டுமே அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஹெப்பால் சாக்கடை கால்வாய்க்கு பிரச்னை ஏற்படும். இந்த சுரங்கப்பாதையில் செல்லும்போது 2031ம் ஆண்டு நிலவரப்படி 13 நிமிடமும், 2041ம் ஆண்டு நிலவரப்படி 15 நிமிடமும் குறையும் என்று, விரிவான திட்ட அறிக்கை சொல்கிறது. நகரில் நாளுக்கு, நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், சுரங்கப்பாதை திட்டம் பயனளிக்காது. பொது போக்குவரத்து வரும் 2060ம் ஆண்டிற்குள் சுரங்கப்பாதையின் ஒரு திசையில் 11,351 வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் என்பதை, இந்திய அறிவியல் நிறுவனம் சுட்டிகாட்டுகிறது. பெங்களூரு - மைசூரு இடையே 119 கி.மீ., துாரத்திற்கு 8,480 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிசாலை அமைக்கப்பட்டுள்ளது. அடல் சுரங்கப்பாதை 9.02 கி.மீ., துாரம் 3,300 கோடி ரூபாயிலும்; மும்பை கடற்கரை சாலை 29.2 கி.மீ., 13,000 கோடி ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.புரம் - சில்க் போர்டு இடையே 18.3 கி.மீ., துாரத்திற்கு 5,446 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ பாதை அமைய உள்ளது. ஆனால் ஹெப்பால் - சில்க் போர்டு இடையே 18 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க 18,000 கோடி ரூபாய் செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெளிவட்ட சாலையில் இலகுரக ரயில் போக்குவரத்து அல்லது டிராம் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கலாம். இதுதொடர்பான சாத்திய கூறுகளை ஆய்வு செய்யலாம். பி.எம்.டி.சி., பஸ்கள் எண்ணிக்கையை 7,000ல் இருந்து 16,000 ஆக உயர்த்தலாம். 300 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ பாதையில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கலாம். பொது போக்குவரத்தை அதிகரிப்பது தான், போக்குவரத்து நெரிசலுக்கு ஒரே தீர்வு. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சந்திப்புக்குப் பின், தேஜஸ்வி சூர்யா அளித்த பேட்டியில், ''நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பொது போக்குவரத்து தான் ஒரே தீர்வு என்பதை, துணை முதல்வர் சிவகுமார் ஒப்புக் கொண்டு உள்ளார். என் அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் பற்றி அவரிடம் விரிவாக எடுத்துக் கூறி உள்ளேன். இந்த சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது,'' என்றார். ஆட்சேபனை சிவகுமார் அளித்த பேட்டி: போக்குவரத்து நெரிசலை குறைக்க, எம்.பி., தேஜஸ்வி சூர்யா கொடுத்த பரிந்துரை மூலம், எனக்கு மாற்று தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரது பரிந்துரைகளை நான் மதிக்கிறேன். அவற்றை ஆராய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவேன். மெட்ரோ பாதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறுகிறார். நகரில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். பெங்களூரு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும் விஷயத்தில், பிரதமர் மோடியை சந்தித்து நாம் அனைவரும் பேசலாம் என்று அழைப்பு விடுத்துள்ளேன். லால்பாக்கின் ஆறு ஏக்கர் நிலம், சுரங்கப்பாதை சாலைக்கு பயன்படுத்தப்படாது. புறநகர் ரயில் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி, தேஜஸ்வி சூர்யா கூறுகிறார். மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடம் பேசுவோம் என்று கூறி உள்ளேன். பொது போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று, தேஜஸ்வி சூர்யா கூறுகிறார். இரட்டை நிலைப்பாடு அவர் தொகுதி மக்களிடம் சென்று, கார்களை வீட்டில் விட்டுவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள் என்று முதலில் அழைப்பு விடுக்கட்டும். சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக ஒரு புறம் என்னை சந்தித்துள்ளார். இன்னொரு புறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து, சுரங்கப்பாதை சாலை இடத்தை ஆய்வு செய்யட்டும். ஏதாவது தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறோம். எந்த திட்டத்தையும் மேற்கொள்ள பணம் தேவை. வேலை நடக்கவில்லை என்று 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டால் மட்டும் போதாது. யார் வேண்டும் என்றாலும் அதை செய்யுங்கள், இதை செய்யுங்கள் என்று பரிந்துரை செய்யலாம். ஆனால் பணம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ