அம்பேத்கர் படம் அவமதிப்பு மைசூரில் தர்ணாவால் பதற்றம்
மைசூரு: மைசூரு வாஜமங்களா கிராமத்தில் அம்பேத்கரின் பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டு, மாட்டு சாணத்தால் பூசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.மைசூரு வாஜமங்களா கிராமத்தில், இம்மாதம் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை, பல்வேறு தலித் அமைப்புகள், இளைஞர்கள் சேர்ந்து கொண்டாடினர்.இதற்காக கிராமத்தின் பல பகுதிகளில் அம்பேத்கரின் பிளக்ஸ் பேனர்கள் பொருத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், அம்பேத்கர் படம் உள்ள பேனர்களை கிழித்து, மாட்டு சாணத்தால் பூசி உள்ளனர்.நேற்று காலையில், இதை பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஒன்று கூடி, தர்ணாவில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., அப்பகுதிக்கு உட்பட்ட போலீசார், அதிகாரிகள் கிராமத்துக்கு வந்தனர். பால் பூத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.அதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், அம்பேத்கர் படத்தை கிழித்து, மாட்டு சாணம் பூசியது தெரிந்தது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை என்பது தெரிய வந்தது.போலீசார் கூறுகையில், 'இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலை செய்தவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல; வெளியூர் வாசிகள் தான். ஒற்றுமையை சீர்குலைக்க இதுபோன்று நடந்து கொண்டுள்ளனர். எனவே சட்டத்துக்கு விரோதமாக எந்தவித நடவடிக்கையிலும் யாரும் ஈடுபட வேண்டாம்' என்று கிராமத்தினரிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களும் சமாதானம் அடைந்து, தர்ணாவை வாபஸ் பெற்றனர்.