உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

யார் இன்; யார் அவுட்?

ஒ ருவழியாக கருப்புக் கோட்டு சங்கத்துக்கு தேர்தல் தேதி குறிச்சாச்சு. ஓட்டுக்கு கேன்வாஸ் பேரமும் தொடங்கியாச்சு. இத்தேர்தலால் யார் இன்? யார் அவுட் என்பதே கேள்வி. எதிர்பார்த்த தேர்தல் நடக்கப் போவதால, யார் யாருக்கு ஓட்டுரிமை உள்ளது? யாரை எல்லாம் ஓட்டுரிமை இல்லாமல் நீக்கி இருக்காங்க, இதெல்லாம் இன்னும் வெளியிடப்படவில்லை. எல்லாமே மர்மமாக இருக்குது. எதிர்ப்பாளர்களை நீக்கும் உள்வேலைகள் நடத்தியுள்ளதாக ஒரு தரப்பில் பேசினாலும், அப்படி நீக்கி இருந்தால் தேர்தலுக்கு தடை வாங்கவும் சிலர் தயாராக இருக்காங்க. தடை வாங்குவதால், தேர்தலே நடக்காமல் மேலும் காலம் தள்ள ஐந்தாவது வருஷத்திலும் பதவியில் தொடர்பவர்களுக்கு தான் லாபமாம். எப்படி அறிவார்ந்தவங்க ஜடியா? அக்டோபரில் தேர்தல் நடத்த அதன் செயற்குழு ஓகே சொன்னதால், சட்டம் அறிந்தவங்க சுறுசுறுப்படைந்திருக்காங்க.

வாய் பந்தல் உதவுமா?

தொ ழிற்பூங்கா ஏற்படுத்தப் போவதாக அசெம்பிளிக்காரர் மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டு இருப்பது போல, செங்கோட்டையின் புல்லுக்கட்டுக்காரரும் தமது பங்குக்கு ரெண்டு தொழிற்சாலையை ஏற்படுத்தப்போவதாக கோல்டு சிட்டியில் உறுதி அளித்துள்ளார். இவரும் கூட, இப்போது தான் வாய் பந்தல் போட்டிருக்காரு. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா? மணலை கயிறு திரிக்கிற பேச்சாக இதையும் கணக்கில் சேர்க்கணுமா? மைன்சை மூடி 25 வருஷத்துக்கு பிறகு எவ்வளவு பேருக்கு மக்கள் பிரதிநிதிகள் வேலை கிடைக்க செய்தாங்கன்னு கட்சிகள் சொல்ல முடியுமா? புதிய வேலை வாய்ப்புக்கு கனவு காணும் இளைஞர்களுக்கு இன்னும் அந்த கனவுகள் கலையவே இல்லை. 1994ல் ஆரம்பித்து, ஒவ்வொரு பொது தேர்தலின்போதும் தொழிற்சாலை ஏற்படுத்த போவதாகவே வேட்பாளர்கள் தரும் உத்தரவாதத்தை கேட்டபடி இருக்காங்க. இன்னும் இவங்கள நம்புறவங்க இருக்குறவரை தாராளமாக லோடு லோடாக மக்களை ஏமாற்ற பொய்களை கொட்டிக்கொண்டே இருப்பாங்களோ?

குடிநீர் பஞ்சம் தீர்க்கப்படுமா?

தெ ன் பாலாறு நீரை ஏரியில் தேக்கி, அதை சுத்திகரிப்பு செய்து குடிநீர் வழங்கிய காலம் மறைந்து, குடிநீருக்கு தட்டுப்பாடாகி உள்ளபோது, நிரந்தர குடிநீர் தீர்வுக்கு யாரைத்தான் கேட்பது? போர்வெல் நீரை சுத்திகரிப்பு செய்து காசுக்கு விற்பனை செய்கிற பிசினசை தான் ஊரில் பெருசா சாதனையாக பேசனுமா? யாருக்காக... எதுக்காக எரகோள் அணை கட்டினாங்க. அந்த நீர், கோல்டு சிட்டி தாகத்தை தணிக்க ஏன் கிடைக்கல? அதை ஏன் கேட்க மறக்குறாங்க? கோல்டு சிட்டி ஒட்டியே ஓடும் கிருஷ்ணா நதி நீரை கேட்டுப் பெற என்ன தயக்கமோ? இன்னும் எத்தனை காலத்துக்கு குடிநீருக்கும் தங்கம் விளைந்த நிலம் பஞ்சத்தில் வறண்டு கிடக்கப் போகுதோ?

யாருக்காக குரு பவன்?

மு ப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக ஆசிரியர், ஆசிரியைகளுக்கான குருபவன் கட்டடம் கட்ட வேணும்னு முயற்சித்தாங்க. பழமையான ஒரு பள்ளிக்கூடம் மூடிய பின் அந்த நிலத்தில் பல லட்சம் செலவில் கட்டடம் கட்டி முடித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுக்கு பல லட்சம் செலவுல காம்பவுண்டும் கட்டினாங்க. கடந்தாண்டு இதே கட்டடத்தில் தான் குரு தின விழா கொண்டாடினாங்க. ஆனால், இன்னும் அந்த கட்டடத்தை பூட்டியே வெச்சிருக்காங்க. இவ்வாண்டு, குரு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடத்துறாங்க. இதுக்கு எதுக்கு குரு பவன் அரங்கம்? குரு பவன் வளாகத்தில் இருந்த தேசப்பிதா சிலை என்னானது? அவரோட நுாற்றாண்டு நினைவாக கட்டப்பட்ட கட்டடம் சிதிலமடைந்து இருக்குதே, இதை யார் கவனிக்க போறாங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி