தனிகேபைலுவில் யானைகள் சரணாலயம் வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தகவல்
பெங்களூரு: சிக்கமகளூரு தனிகேபைலு யானைகள் சரணாலயம் அமைக்க ஏற்ற இடம் என, நிபுணர்கள் பரிந்துரை செய்திருப்பதாக, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி உள்ளார். பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், மாவட்ட வனத்துறை அதிகாரிகளுடன், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று ஆலோசனை நடத்தினார். மனிதர்கள் - யானை மோதலை தடுப்பது; யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, தண்டவாளத்தை பயன்படுத்தி தடுப்பு வேலி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஈஸ்வர் கன்ட்ரே பேசியதாவது: யானைகள் சரணாலயம் அமைப்பதற்கு சிக்கமகளூரு முத்தோடியை விட தனிகேபைலு பொருத்தமான இடம் என்று, வன நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. சரணாலயம் அமைப்பது பற்றி தனிகேபைலு கிராம மக்களுடன் விவாதிக்கப்படும். அடுத்த வாரம் டில்லி சென்று, மத்திய வனத்துறை அமைச்சரை சந்திப்பேன். யானைகள் சரணாலயம் குறித்து அவருடன் விவாதிப்பேன். எந்த பகுதியில் யானை பிரச்னை அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து, மக்களை உஷார் படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதலை தடுக்க விரிவான கட்டளை மையம் அமைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தாலும், அதில் இன்னும் தாமதம் ஏற்படுகிறது. உடனடியாக ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். வனவிலங்குகள் குறித்து மக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக பதில் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.