தமிழகத்தை இணைக்கும் மேம்பால சுவர் இடிந்தது போக்குவரத்துக்கு தடை
சாம்ராஜ்நகர்: மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலு காவில் உள்ளது உத்தம்பள்ளி மேம்பாலம். இந்த மேம்பாலம் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது. இம்மேம்பாலத்தில் பயணிப்பதன் மூலம் சாம்ராஜ்நகர், பெங்களூரு, மலைமஹாதேஸ்வரா மலை, தமிழகத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளுக்கு செல்ல முடியும். இப்படிப்பட்ட முக்கியமான மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மேம்பாலத்தின் மீது வாகனம் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கபட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தகவல் அறிந்த கொள்ளேகால் காங்., - எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் கூறுகையில், ''மேம்பால பணிகள் மோசமாக நடந்து உள்ளன. இதனால், பாலம் இடிந்து உள்ளது. பாலத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.