காரை ஏற்றி நாயை கொன்ற கொடூரன்
ராயசந்திரா: பின் வீட்டில் வசிப்பவர் வளர்க்கும் தெரு நாய் மீது கார் ஏற்றி கொன்றவர் மீது புகார் பதிவாகி உள்ளது. பெங்களூரு ராயசந்திராவை சேர்ந்தவர் ரமேஷ். கடந்த சில ஆண்டுகளாக, தன் வீட்டு பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து கவனித்து கொள்கிறார். கடந்த சில மாதங்களாக, இவர் வளர்க்கும் தெரு நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. விபத்தால் இறந்திருக்கலாம் என்று விட்டு விட்டார். ஆனால் கடந்த 13ம் தேதி காலை 6:40 மணி அளவில் அவர் வளர்க்கும் மற்றொரு தெரு நாய், சாலையில் வாகனம் ஏறி உயிரிழந்திருந்தது. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது, கார் ஒன்று, வேண்டுமென்றே நாய் மீது ஏற்றி கொன்ற காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த காரை ஓட்டியது, தன் வீட்டின் பின்புறம் வசித்து வரும் ஹரிஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார், ஹரிஷிடம் விசாரித்து வருகின்றனர். சாலையில் படுத்திருந்த நாய் மீது ஏறிய கார் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது.