உலகின் குரு மோடி அல்ல... டிரம்ப் தான் காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் விமர்சனம்
பெங்களூரு : ''நம் நாட்டு விஷயத்தில் மூன்றாவது நபர் நுழைந்திருக்கக் கூடாது. தற்போது உலகின் குருவாக, மோடிக்கு பதிலாக டிரம்ப் திகழ்கிறார். இதன் மூலம் ராணுவத்தினரை மோடி அவமதித்துள்ளார்,'' என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:போர் நிறுத்தம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. சிம்லா ஒப்பந்தப்படி, மற்ற நாடுகள், நம் விஷயத்தில் நுழையக்கூடாது என்று கையெழுத்திட்டிருந்தோம். நம் ராணுவத்தின் வீரத்துடன் போரிட்டு வந்தனர்.ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று அறிவித்தார். போர் நிறுத்தம் குறித்து ராணுவத்தினர் அறிவிக்கும் முன்பாக, டிரம்ப் அறிவித்து விட்டார். நம் ராணுவத்துக்கு அவர் கட்டளையிடுகிறார்.நம் நாட்டு விஷயத்தில் மூன்றாவது நபர் நுழைந்திருக்கக் கூடாது. தற்போது உலகின் குருவாக, மோடிக்கு பதிலாக டிரம்ப் திகழ்கிறார். இதன் மூலம் ராணுவத்தினரை மோடி அவமதித்துள்ளார்.பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க, நாங்கள் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்தோம். அனைத்து முடிவுக்கும் ஆதரவு அளிப்போம் என்றும் கூறினோம். எங்கள் கட்சித் தலைவர்கள் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பார்லி சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பின், நேரடியாக பீஹாரில் நடக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் சென்றுவிட்டார். அதன்பின் கேரளா, பாலிவுட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதை பார்க்கும்போது இதன் சூட்சுமம் தெரியும்.பாகிஸ்தானுக்கு நிதி வழங்க வேண்டாம் என்று ஐ.எம்.எப்., எனும் சர்வதேச நாணய நிதியத்திடம், நம் நாடு கேட்டுக் கொண்டும், பாகிஸ்தானுக்கு நிதி வழங்கி உள்ளது. இதன் மூலம் தலைமை பொறுப்பில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம்.இந்திரா, 1971ல் வங்கதேச சுதந்திரத்துக்காக பாகிஸ்தானுக்கு எதிராக போர் துவக்க நினைத்தார். ஆனால் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் மறுத்தார். ஆனாலும், அவரின் பேச்சுக்கு எதிராக, பாகிஸ்தானுடன் போரிட்டு வெற்றி பெற்றார்.இவ்வாறு அவர் கூறினார்.