- நமது நிருபர் -: முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் ஒருவருக்கு ஒருவர் சிற்றுண்டி விருந்து கொடுத்து, ஒற்றுமையாக இருப்பதை போன்று காட்டுகின்றனர். மற்றொரு பக்கம், சிவகுமாரின் தம்பியான, 'மாஜி' எம்.பி., சுரேஷ், டில்லியில் காங்., மேலிடத்தை சந்தித்து, அண்ணனின் முதல்வர் பதவிக்காக முயற்சிக்கிறார். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு வெற்றிகரமாக இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்த பின், முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. யாரும் விட்டு கொடுப்பதாக இல்லை. இறுதியில் இருவரும், தலா இரண்டரை ஆண்டுகள், முதல்வர் பதவியில் இருக்கும்படி மேலிடம் ஆலோசனை கூறியது. இந்த பதவி பகிர்வு ஒப்பந்தம், சிவகுமாருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், சோனியா தலையிட்டு, சமாதானம் செய்ததா ல் சம்மதித்தார். அப்போது, மேலிட அளவில் செய்து கொண்டதாக கூறப்படும் ஒப்பந்தப்படி, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு, சித்தராமையா முதல்வரானார். விருப்பமே இல்லாமல் சிவகுமார் துணை முதல்வரானார். நவம்பர், 20ம் தேதியுடன், அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த சில மாதங்களாகவே, முதல்வர் மாற்றம் நிகழும் என, சில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறி வந்தனர். சில அமைச்சர்கள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாகவும், மற்ற சிலர் துணை முதல்வர் சிவகுமாருக்கு ஆதரவாகவும் நிற்கின்றனர். முதல்வரை தேர்வு செய்வதில், எம்.எல்.ஏ.,க்களின் பங்களிப்பு அவசியம். எனவே, எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுக்க, முதல்வரும், துணை முதல்வரும் முயற்சிக்கின்றனர். யார் பக்கம் நிற்பது என, தெரியாமல், எம்.எல்.ஏ.,க்கள் மண்டையை பிய்த்து கொள்கின்றனர். மாநில அரசில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்த மேலிடம், முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஆலோசனை நடத்தும்படி உத்தரவிட்டது. அதன்படி இருவரும் ஆலோசனை நடத்தினர். பெலகாவி குளிர் கால கூட்டத்தொடருக்கு பின், பதவி பகிர்வு குறித்து ஆலோசிக்கலாம் என்று, முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிவகுமாரின் தம்பியும், முன்னாள் எம்.பி.,யுமான சுரேஷ், தன் அண்ணனை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதில், மும்முரமாக இருக்கிறார். கொடுத்த வாக்குறுதிபடி நடந்து கொள்ள வேண்டும் என, சித்தராமையாவிடம் மறைமுகமாக வலியுறுத்தினார். ஒவ்வொரு தேர்தலிலும், சிவகுமார் பிரசாரத்துக்கு வந்தது இல்லை. தன் அண்ணனுக்கு ஆதரவாக சுரேஷே பிரசாரம் செய்வார். இவரே வேட்பாளர் என்பதை போன்று, தேர்தலில் பணியாற்றுவார். இவரை எம்.பி.,யாக்கி சிவகுமார் அழகு பார்த்தார். அதே போன்று, அண்ணனை முதல்வர் நாற்காலியில் அமர்த்தி பார்க்க வேண்டும் என்பது, சுரேஷின் கனவு. அதை நனவாக்க சில நாட்களாக டில்லியில் தங்கி, வியூகம் வகுத்துள்ளார். மேலிட தலைவர்களை சந்தித்து, 'சிவகுமாருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும். கட்சிக்காக அதிகம் உழைத்தவர். 'அதற்கான பலன் அவருக்கு கிடைக்க வேண்டும். பதவியை விட்டுத்தரும்படி சித்தராமையாவுக்கு உத்தரவிடுங்கள்' என, நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.