கமல் படம் திரையிட்டால் தியேட்டருக்கு தீ என மிரட்டல்
பெங்களூரு: 'கன்னட மொழியை அவமதித்த நடிகர் கமல் தக் லைப் திரைப்படத்தை, கர்நாடகாவில் திரையிடக்கூடாது. திரையிட்டால் திரையரங்குகளுக்கு தீ வைப்போம்' என, கன்னட ரக்ஷனா வேதிகே மிரட்டல் விடுத்துள்ளது.இதுகுறித்து, ரக்ஷனா வேதிகே தலைவர் நாராயண கவுடா அளித்த பேட்டி:தன் பேச்சுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கேட்காமல், முரண்டு பிடிக்கிறார். இனியும் அவர் இதே மனப்போக்கை தொடர்ந்தால், கர்நாடகாவின் எந்த திரையரங்குகளிலும், அவர் நடித்த 'தக் லைப் திரைப்படத்தை திரையிட கூடாது. இதற்கு நாங்கள் வாய்ப்பளிக்கமாட்டோம்.ஒருவேளை திரையிட்டால், அந்த திரையரங்குக்கு தீ வைப்போம். இதற்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கொள்ளட்டும். எங்களுக்கு கவலை இல்லை. கமல், தமிழ் திரையுலகில் பெரிய நடிகர். அவர் மீது எங்களுக்கு அதிகமான மதிப்பு இருந்தது. ஆனால் தமிழர்களை கவர, கன்னடத்துக்கு எதிராக பேசியுள்ளார்.மற்ற மொழிகளை பற்றி பேசும்போது, குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். இவர் நடிக்கும் திரைப்படம், மாநிலத்தில் திரையிடக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.