உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வனத்துறையிடம் சிக்காமல் ஆட்டம் காட்டும் புலி

வனத்துறையிடம் சிக்காமல் ஆட்டம் காட்டும் புலி

சாம்ராஜ்நகர்: அவ்வப்போது மக்கள் முன் நடமாடி அச்சுறுத்தி வரும் புலி, வனத்துறையினரிடம் சிக்காமல் ஆட்டம் காட்டுகிறது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், மத்தய்யனஹுன்டி கிராமத்தில் ஒரு மாதமாக, புலி நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது மக்களின் கண்களில் தென்பட்டு, மறைந்து விடுகிறது. வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியது. கிராமத்தினர் வெளியே நடமாட அஞ்சுகின்றனர். தோட்டங்கள், வயல்களுக்கு செல்லும் விவசாயிகள், எப்போது புலி தாக்குமோ என்ற அச்சத்துடனே நடமாடுகின்றனர். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். ஆடு, மாடுகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பதே, கிராமத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. புலியை பிடிக்கும்படி, கிராமத்தினர் வலியுறுத்தியதால், வனத்துறையினர் கிராமத்தில் முகாமிட்டு, வளர்ப்பு யானையின் உதவியுடன் புலியை தேடுகின்றனர். நான்கு நாட்களாக தேடியும் கண்களில் தென்படாமல் ஆட்டம் காட்டுகிறது. எங்கு பதுங்கியுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. கேமராவின் கண்களிலும் சிக்கவில்லை. கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்கின்றனர். 'புலி நடமாட்டம் இருப்பதால், கிராமத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக நடமாட வேண்டாம். 'சிறு குழந்தைகளை வெளியே விட வேண்டாம். வளர்ப்பு பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை