உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தக்காளி விலை கடும் சரிவு சாலையில் கொட்டி கோபம்

தக்காளி விலை கடும் சரிவு சாலையில் கொட்டி கோபம்

கோலார்: கோலார் மாவட்டத்தில், தக்காளி அமோகமாக விளைந்துள்ளது. ஆனால் மார்க்கெட்டில் நியாயமான விலை கிடைக்கவில்லை. கூலியாட்களுக்கு கொடுக்கும் அளவுக்கும் விலை இல்லாததால், விவசாயிகள் விரக்தி அடைந்து தக்காளியை சாலையில் கொட்டுகின்றனர்.கோலார் மாவட்டத்தில், பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை பற்றாக்குறை, நோய் தாக்கியது, வானிலை மாற்றம் போன்ற காரணங்களால், விளைச்சல் சேதமடைந்தது. நல்ல விலை இருந்தும் விற்பனை செய்ய தக்காளி இல்லாமல், விவசாயிகள் அவதிப்பட்டனர்; நஷ்டத்தை அனுபவித்தனர். பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தும் பயன் இல்லை. இதனால், விவசாயிகள் பலரும் தக்காளி பயிரிடுவதையே நிறுத்தினர்.அதன்பின் தக்காளியின் விலை ஏறுமுகமானது. கிலோ 100 ரூபாயை தாண்டியது. அதிக லாபம் கிடைத்ததால், விவசாயிகள் கடனை அடைத்துவிட்டு நிம்மதி அடைந்தனர். கோலாரின் அக்கம், பக்கத்தில் உள்ள சித்ரதுர்கா, துமகூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களின் விவசாயிகள், தக்காளி பயிரிட ஆரம்பித்தனர்.கோலார் மாவட்டத்தில், இம்முறை கோடை மழை நன்றாக பெய்தது. பயிர்களுக்கு நோய் பாதிப்பும் இல்லை. எனவே தக்காளி அமோகமாக விளைந்துள்ளது. தக்காளியும் தரமாக இருப்பதால், அதிக லாபம் கிடைக்கும் என, விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர்.வேறு மாவட்டங்களில் இருந்தும், கோலாரின் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு பெருமளவில் தக்காளி வருகிறது. ஆனால் நியாயமான விலை கிடைக்கவில்லை. 15 கிலோ கொண்ட ஒரு பாக்ஸ் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. போட்ட முதலீடும் கிடைக்கவில்லை. கூலியாட்களுக்கு கொடுக்கும் அளவுக்கு கூட விலை கிடைப்பது இல்லை.கூலியாட்களை வைத்து, தோட்டங்களில் இருந்து அறுவடை செய்து, வாடகை வாகனத்தில் தக்காளியை கொண்டு செல்லும் விவசாயிகள், விலை சரிவால் மனம் நொந்துள்ளனர்.தக்காளியை விற்காமல் சாலையில் கொட்டிவிட்டு, ஊர் திரும்புகின்றனர். கூலியாட்கள் மற்றும் வாகன வாடகை செலவாவது மிச்சமாகட்டும் என, கருதி சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.கஷ்டப்பட்டு விளைவித்த தக்காளியை, விவசாயிகள் சாலையில் கொட்டுகின்றனர். தக்காளிக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என, விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ