உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுற்றுலா பயணியரின் சொர்க்கம் உச்சள்ளி நீர்வீழ்ச்சி!

 சுற்றுலா பயணியரின் சொர்க்கம் உச்சள்ளி நீர்வீழ்ச்சி!

- நமது நிருபர் - பொதுவாக நீர் வீழ்ச்சிகள் என்றாலே, சிறுசுகள் முதல் பெருசுகள் வரை, அனைவருக்கும் பிடிக்கும். உயரமான இடத்தில் இருந்து பார்ப்பதும், நீரில் இறங்கி விளையாடுவதும் புதிய அனுபவமாக இருக்கும். இதை அனுபவிக்கவே, சுற்றுலா பயணியர் நீர் வீழ்ச்சிகளை தேடி செல்வது வழக்கம். கோடைக்காலம், மழைக்காலம் என, அனைத்து காலங்களிலும் நீர் வீழ்ச்சிகளை ரசிக்கலாம். பெங்களூரை போன்ற கான்கிரீட் காடுகளில் வசிக்கும் மக்கள், இயற்கை காட்சிகளை காண, பெரிதும் விரும்புவர். விடுமுறை கிடைத்தால் வனப்பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். கர்நாடகாவில் நீர் வீழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை. பல்வேறு மாவட்டங்களில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மாநிலத்தின் பிரபலமான நீர் வீழ்ச்சிகளில், உச்சள்ளி நீர் வீழ்ச்சியும் ஒன்றாகும். ஒரு முறை இங்கு சென்றால், அங்கிருந்து திரும்பவே மனம் வராது. சுற்றுலா பயணியரின் சொர்க்கம். இது, உத்தரகன்னட மாவட்டம், சிர்சி தாலுகாவில் உள்ளது. இதை லுஷிங்டன் நீர்வீழ்ச்சி என்றே அழைக்கின்றனர். உலகின் சில அற்புதமான நீர் வீழ்ச்சிகளில், இதுவும் ஒன்றாகும். அகநாஷினி ஆற்றில் இருந்து உருவான உச்சள்ளி நீர் வீழ்ச்சி, 371 அடி உயரத்தில் இருந்து, பேரிரைச்சலுடன் கீழே பாய்ந்து வரும் தண்ணீரை பார்ப்பதே, தனி சுகமாகும். அடர்த்தியான வனப்பகுதி, சுற்றிலும் பசுமையான மலைகள் சூழ்ந்த இடத்தில் நீர் வீழ்ச்சி உள்ளது. இங்கு எளிதில் செல்ல முடியாது. சிறிது கஷ்டப்பட வேண்டும். அபூர்வமான மரங்கள், செடி, கொடிகளில் இருந்து எழும் நறுமணத்தை சுவாசித்தபடி, சில்லென்று உடலை வருடிச்செல்லும் தென்றல் காற்றை அனுபவித்த படி, காதுகளுக்கு இனிமையான பறவைகளின் ரீங்காரத்தை கேட்டபடி நடந்து செல்வது, புதுமையான அனுபவத்தை அளிக்கும். உயரமான இடத்தில் இருந்து, தாவி குதிக்கும் நீர் கற்பாறைகள் மீது விழுந்து, பால் நுரையை போன்று தெறிப்பதை காண்பது, மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். எந்த பரபரப்பும் இல்லாமல், நிசப்தமான சூழ்நிலையில் நிம்மதியாக பொழுது போக்க விரும்புவோருக்கு, உச்சள்ளி நீர் வீழ்ச்சி பெஸ்ட் சாய்ஸ். அனைத்து காலங்களிலும் தண்ணீர் பாயும். பொதுவாக, பகல் நேரத்தில் வானவில் தோன்றும். ஆனால், பவுர்ணமி இரவில் இந்த நீர் வீழ்ச்சியில் வானவில் தோன்றுகிறது. அடர்த்தியான வனப்பகுதியில் இருந்த காரணத்தால், உச்சள்ளி நீர் வீழ்ச்சி வெளி உலகத்துக்கு தெரியாமல், ரகசியமாகவே இருந்தது. பிரிட்டிஷ் அதிகாரியான லுஷிங்டன் என்பவர், 1845ல் இதை கண்டுபிடித்தார். எனவே அவரை கவுரவிக்கும் வகையில், நீர் வீழ்ச்சிக்கு அவரது பெயரை வைத்தனர். சமீப காலமாக, இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இளைஞர்கள், இளம் பெண்கள் மலையேற்றத்துக்கும் ஆர்வமாக வருகின்றனர். அழகு உள்ள இடத்தில், ஆபத்தும் இருக்கும். நீர் வீழ்ச்சியின் ஆழம் எவ்வளவு என்பது தெரியாது. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணியர், குறிப்பாக நீச்சல் தெரியாதவர்கள், நீரில் இறங்குவது ஆபத்தானது. சற்று தொலைவில் இருந்து, இயற்கை காட்சிகள், நீர் வீழ்ச்சியை கண்டு ரசித்து விட்டு செல்வது நல்லது. இங்கு வருவதற்கு முன், சுற்றுலா துறையின் இணையதளத்தில், நீர் வீழ்ச்சியை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அடர்த்தியான வனப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்பதால், வழிகாட்டியை உடன் அழைத்து செல்வது நல்லது. இல்லையென்றால் வழி மாறும் அபாயம் உள்ளது. அருகில் உள்ள தலங்கள் புருடே ஜோகா நீர் வீழ்ச்சி, யானா குகைகள், மத்திகோடி யானைகள் முகாம். எப்படி செல்வது? * உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியில் இருந்து, 35 கி.மீ.,யில், ஹெக்கரனே என்ற கிராமம் உள்ளது. கிராமத்தின் அருகில் உச்சள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, 1 கி.மீ., வனப்பாதையில் நடந்து சென்றால், நீர் வீழ்ச்சியை அடையலாம். * முக்கிய நகரங்களில் இருந்து, சிர்சிக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சிர்சியில் இறங்கி வாடகை வாகனத்தில் நீர் வீழ்ச்சிக்கு செல்லலாம். விமானத்தில் வர விரும்பினால், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கலாம். இந்த விமான நிலையம், நீர் வீழ்ச்சியில் இருந்து, 140 கி.மீ., தொலைவில் உள்ளது. * உச்சள்ளி நீர் வீழ்ச்சியை காண, நேரம் கட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆனால் அடர்ந்த வனப்பகுதி என்பதால், இருள் சூழ்வதற்குள், அங்கிருந்து கிளம்புவது நல்லது. சிர்சியில் தங்குவதற்கு தரமான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை