உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாலிபர் தற்கொலையில் ஹனிடிராப் இல்லை உடுப்பி எஸ்.பி., ஹரிராம் சங்கர் விளக்கம்

வாலிபர் தற்கொலையில் ஹனிடிராப் இல்லை உடுப்பி எஸ்.பி., ஹரிராம் சங்கர் விளக்கம்

உடுப்பி: ''லாட்ஜில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர் விஷயத்தில், 'ஹனிடிராப்' செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை,'' என உடுப்பி மாவட்ட எஸ்.பி., ஹரிராம் சங்கர் தெரிவித்தார். உடுப்பி மாவட்டம், கார்கலாவின் நிட்டே பரப்படியை சேர்ந்தவர் அபிஷேக் ஆச்சார்யா, 23. கடந்த 9ம் தேதி, தன் நான்கு நண்பர்கள், ஒரு இளம் பெண் ஆகியோர் பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு, லாட்ஜ் ஒன்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கார்கலா கிராமப்புற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன், மடிக்கணினியை பறிமுதல் செய்து, ஆய்வு செய்து வருகின்றனர். அபிஷேக் தற்கொலை செய்து கொள்வதற்கு, இளம் பெண் செய்த 'ஹனி டிராப்' தான் காரணம் என்று, அவரது குடும்பத்தினர், கார்கலா கிராமப்புற போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி., ஹரிராம் சங்கர் கூறியதாவது: தற்கொலை செய்த அபிஷேக், குற்றம் சாட்டிய இளம் பெண்ணின் மொபைல் போனில், ஆபாச படங்கள், வீடியோ எதுவும் இல்லை. அப்பெண், யாருக்கும் எந்த வீடியோவும் அனுப்பவில்லை. கடந்த மாதம் அபிஷேக், இளம் பெண்ணுக்கு அனுப்பிய பணத்தை, அதே நாளில், திருப்பி அனுப்பி விட்டார். தற்கொலை செய்வதற்கு முன், மங்களூரில் உள்ள லேடி கோசன் மருத்துவமனையில் உள்ள சக ஊழியர்களின் வாட்ஸாப் குழுவில், இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை அபிஷேக் பகிர்ந்துள்ளார். இதையறிந்த இளம்பெண், போலீசில் புகார் அளிப்பதாக கூறியிருந்தார். இளம் பெண் தன் அறையில் ஆடை மாற்றும் போது, அவரது தோழி மொபைல் போனில் பதிவு செய்தார். இதை வாட்ஸாப் மூலம், இளம் பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். இந்த வீடியோவை, இளம்பெண்ணின் தோழியிடம் இருந்து அபிஷேக் வாங்கி உள்ளார். அபிஷேக்கின் மொபைல் போன், பரிசோதனைக்காக எப்.எஸ்.எல்., எனும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இளம்பெண் ஆடை மாற்றுவதை, லேடி கோசன் மருத்துவமனையில் பணியாற்றும் தனது நண்பர்களுக்கு அபிஷேக் எதற்காக அனுப்பினார்? இந்த வீடியோ தவறான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதா என்று விசாரணை நடந்து வருகிறது. தற்கொலை கடிதம் எழுதியது அபிஷேக் தானா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 'ஹனிடிராப்' மூலம் பணம் பறித்ததாக கூறி வாலிபர் தற்கொலை செய்த விஷயத்தில், அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. இளம் பெண் தொடர்பான ஆபாசமான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை