உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சட்டசபை சபாநாயகர் காதர் மீது மேல்சபை தலைவர் அதிருப்தி

சட்டசபை சபாநாயகர் காதர் மீது மேல்சபை தலைவர் அதிருப்தி

பெங்களூரு : விதான் சவுதா தொடர்பாக எந்த முடிவையும் சபாநாயகர் காதரே எடுப்பதால் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் காதருக்கு, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி எழுதிய கடிதம்: ஒரு ஜனநாயக அமைப்பில், கர்நாடக சட்டசபையும், மேல்சபையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று நம்புகிறேன். இரு சபைகள் கொண்ட ஒரு மாநிலத்தில், சட்டசபையால் நடத்தப்படும் அலுவலக திட்டங்களும், தொலைநோக்கு பார்வையில் ஒரே திசையில் நகர வேண்டும். ஆனால் சமீப காலங்களில், அதிகாரப்பூர்வமான திட்ட முடிவுகள் குறித்து, கர்நாடக மேல்சபை தலைவரான என்னிடம் எந்த கருத்தும் கேட்காமல், ஒரு தலைபட்சமாக முடிவெடுப்பதை பார்க்கும்போது, வெறுப்பாக உள்ளது. உதாரணமாக, சமீபத்தில் விதான் சவுதா வளாகத்தில் புத்தக கண்காட்சி அல்லது லேசர் விளக்கு நிறுவுதல் என எந்த விஷயமாக இருந்தாலும், என்னிடம் கருத்து கேட்பதில்லை. இவை பற்றி ஊடகங்கள் மூலமாகவே தெரிந்து கொண்டேன். அடுத்த மாதம் கரீபியன் கிழக்கு பகுதியில் உள்ள தீவு நாடான பார்படாசில் நடக்க உள்ள சி.பி.ஏ., மாநாடு குறித்தும் என்னிடம் கருத்து கேட்காமல், ஒருதலைபட்சமாக நீங்களே முடிவு எடுத்து உள்ளீர்கள். இதனால், என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மற்ற மாநிலங்களின் சபாநாயகர்கள், மேல்சபை தலைவர்களின் சந்தேகங்களுக்கு, இம்மாநாடு குறித்து தகவல்களை தெரிவிக்க இயலவில்லை. இதன் மூலம், அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில், எந்த நாட்டிற்கு ஆய்வு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை எனக்கு இல்லை என்று உணர்கிறேன். உங்களின் முடிவால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, என்னை கட்டாயப்படுத்தி உள்ளீர்கள். இதுவரை இதை பொறுத்துக் கொண்டேன். இனி இதுபோன்று நடக்காது என்று நம்புகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ