உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பழுதடைந்த குடிநீர் நிலையம் அவதிப்படும் கிராம மக்கள்

 பழுதடைந்த குடிநீர் நிலையம் அவதிப்படும் கிராம மக்கள்

தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ளது நாகலேஹள்ளி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் நலனுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த நிலையம் இரண்டு ஆண்டுகளாக பழுந்தடைந்துள்ளது. அது சீரமைக்கப்படாததால், கிராம மக்கள் சுத்தமான குடிநீருக்காக நான்கைந்து கிலோ மீட்டர் துாரம் வரை சென்று, குடிநீர் பெற்று வருகின்றனர். நாகலேஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்லும் ஏழைகள். மேலும், வீடுதோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் உள்ளனர் .அன்றாட அத்தியாவசிய தேவையான சுத்தமான குடிநீருக்கு, இவர்கள் தினமும் கஷ்டப்படுகின்றனர். சுத்தமான குடிநீர் பெறுவதற்காக பேத்தமங்களா வரை செல்கின்றனர். பழுதடைந்த குடிநீர் நிலையத்தை பழுது பார்க்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம், கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை யாரும் கண்டு கொள்ள வில்லை. எனவே, குடிநீர் அவசிய தேவை என்பதை உணர்ந்து, பழுதடைந்த குடிநீர் நிலையத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என, கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை சந்தித்து, நாகலேஹள்ளி மக்கள் வலியுறுத்தினர். இதுபற்றி கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி ரேஷ்மி கூறுகையில், 'நாகலேஹள்ளி குடிநீர் நிலையம் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. பழுதடைந்த நிலையில் இருப்பது எங்களுக்கு தெரியாது. தற்போது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இத்தகவலின் பேரில் ஆய்வு செய்வோம். விரைந்து பழுது பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை