உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கைதிகளுக்கு மொபைல் போன் லஞ்ச வார்டன் மனு தள்ளுபடி

கைதிகளுக்கு மொபைல் போன் லஞ்ச வார்டன் மனு தள்ளுபடி

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகளுக்கு மொபைல் போன் கொடுத்து, பணம் வசூலித்த குற்றச்சாட்டு தொடர்பாக, வார்டன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய, கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதிக்கு மொபைல் போன் பயன்படுத்த, சிறையின் தலைமை வார்டன் பசவராஜ் உப்பார் அனுமதி அளித்துள்ளார். இந்த கைதிக்கு மட்டுமின்றி, மேலும் பல கைதிகளுக்கு மொபைல் போனை கொடுத்து, மணிக்கு 300 ரூபாய் வசூலித்துள்ளார். கைதிகள் மொபைல் போன் பயன்படுத்திய பின், அதில் உள்ள டேட்டாக்களை அழித்துள்ளார். சிறையில் ஊழல் நடப்பது குறித்து, தகவலறிந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள், சிறையில் திடீர் சோதனையிட்டனர். அப்போது, பசவராஜ் உப்பாரை கையும் களவுமாக பிடித்தனர். அவர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜே.எம்.காஜி முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'மனுதாரர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன' என கூறி, அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்