பி.பி.எல்., பட்டியலில் இருந்து யார் நீக்கம்? மேல்சபையில் அமைச்சர் முனியப்பா அதிரடி
பெங்களூரு: ''சட்டசபை கூட்டம் முடிந்த பின், பி.பி.எல்., ரேஷன்கார்டுகள் மாற்றும் பணிகள் துவக்கப்படும். தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்,'' என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா, மேல்சபையில் தெரிவித்தார்.கர்நாடக மேல்சபையின், பா.ஜ, உறுப்பினர் நாகராஜின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் முனியப்பா கூறியதாவது:சட்டசபை முடிந்த பின், மாநிலம் முழுதும் பி.பி.எல்., ரேஷன்கார்டுகள் ஆய்வு பணிகள் துவக்கப்படும். தகுதியற்றவர்களை நீக்கிவிட்டு, உண்மையான பயனாளிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க செய்வோம்.தகுதியற்றவர்கள் தயவு தாட்சண்யம் இன்றி, பி.பி.எல்., பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே, அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் நோக்கம். எனவே பி.பி.எல்., பயனாளிகள் வதந்திகளை நம்ப வேண்டாம்.தென்னகத்திலேயே மிக அதிகமான பி.பி.எல்., கார்டுகள் கொண்டுள்ள மாநிலங்களில், கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. தகுதியற்றவர்கள் பட்டியலில் இருப்பதே, பி.பி.எல்., கார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.இதன் விளைவாக உண்மையான பயனாளிகளுக்கு, சலுகைகள் கிடைப்பது இல்லை. எனவே இதற்கு விரைவில் கடிவாளம் போடுவோம்.பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட்டில் 80 சதவீதம் மக்கள் பி.பி.எல்., கார்டு வைத்துள்ளனர்.விதிகளின்படி 60 முதல் 65 சதவீதம் இருக்க வேண்டும். தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளதால், தகுதியான பயனாளிகள் விடுபடுகின்றனர். வரும் நாட்களில் இத்தகைய குளறுபடி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.வருமான வரி செலுத்துவோர், பி.பி.எல்., ரேஷன்கார்டு பெறக்கூடாது என்ற விதி உள்ளது. ஒருவேளை பிள்ளைகளிடம் இருந்து, பெற்றோர் தனித்திருந்தால் தாசில்தாரிடம் விண்ணப்பித்து, பி.பி.எல்., கார்டு பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.