உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுக்காதது ஏன்? அமைச்சர் சந்தோஷ் லாட் கேள்வி

மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுக்காதது ஏன்? அமைச்சர் சந்தோஷ் லாட் கேள்வி

தாவணகெரே : ''மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்று, கர்நாடக தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ் லாட் கேள்வி எழுப்பி உள்ளார்.தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:நாட்டில் 20 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பசுவை தெய்வம் என்று உச்சரிக்கும் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தர பிரதேசத்தில் தான் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகமாக உள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதை, பா.ஜ., தலைவர்கள் எதிர்க்கின்றனர். அப்படி என்றால் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடுக்க, மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத்திற்கு 600 கோடி ரூபாய்; உத்தர பிரதேசத்திற்கு 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்கான ஆதாரம் இல்லை. தமிழகத்திற்கு 43 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. அதிக விளையாட்டு பதக்கங்களை வெல்லும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் குறைந்த நிதி கொடுக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் இந்த பாகுபாட்டை பொறுத்து கொள்ள முடியாது. நாட்டில் 45 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் தேவை உள்ளது. இதில் 20 சதவீதத்தை கூட மத்திய அரசால் அடைய முடியவில்லை. பெரும் முதலாளிகளின் 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை