உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காட்டு யானைகளால் அபாயம்: அதிநவீன எச்சரிக்கை அலாரம்

காட்டு யானைகளால் அபாயம்: அதிநவீன எச்சரிக்கை அலாரம்

குடகு: காட்டு யானைகளின் அபாயத்தில் இருந்து, கிராமத்தினரை காப்பாற்றும் வகையில், குடகு மாவட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட எச்சரிக்கை அலாரத்தை அரசு சாரா தொண்டு நிறுவனம் பொருத்தியுள்ளது.குடகு மாவட்டத்தில், காட்டு யானைகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக விராஜ்பேட்டின், மால்தாரே, படகா, பனங்காலா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை, மிகவும் அதிகம். விவசாயிகள் வயல், தோட்டங்களுக்கு செல்லவும், சிறார்கள் பள்ளிகளுக்குச் செல்லவும் தயங்கும் சூழ்நிலை இருந்தது. கிராமத்தினர் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். வனத்துறையும் சோலார் வேலி பொருத்துவது, ரயில் தண்டவாள கம்பிகளை பயன்படுத்தி, தடுப்பு அமைப்பது, பள்ளங்கள் தோண்டுவது என, பல விதமான நடவடிக்கை எடுத்தும் பலன் அளிக்கவில்லை.மக்களுக்கு உதவ அரசு சாரா தொண்டு நிறுவனம் முன்வந்தது. விராஜ்பேட்டின் பல கிராமங்களின் வனப்பகுதிகளில், 12 இடங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையிலான எச்சரிக்கை அலாரங்களை பொருத்தியுள்ளது. இந்த அலாரம் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிகிறது. யானைகள் வருவதை 1 கி.மீ., தொலைவில் அடையாளம் கண்டு, அலாரம் ஒலித்து, மக்களை எச்சரிக்கும்.காபி தோட்டங்களில் காட்டு யானைகள் இருந்தாலும், அலாரம் ஒலித்து எச்சரிக்கிறது. இதனால் கிராமத்தினர் பயமின்றி நடமாடுகின்றனர்; பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இத்திட்டம் வெற்றி அடைந்துள்ளது. எனவே மேலும் பல இடங்களில் அலாரம் பொருத்த, தொண்டு அமைப்பு தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை