ஊராட்சி செயலர்களின் டிரான்ஸ்பர் ஆளுங்கட்சியினர் தலையீடால் நிறுத்தமா?
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஊராட்சிக்கு ஒரு செயலர் நியமிக்கப்பட்டு, மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், ஊராட்சி ஆவணங்களை பராமரிப்பதிலும், வரி வருவாய் வசூலிப்பதிலும், ஊராட்சி செயலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.கடந்த ஜனவரியில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, ஊராட்சி செயலர்கள் தங்களுக்கு விருப்பமான ஊராட்சிகளில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, பணி மாறுதல் கோரி திருவாலங்காடு பி.டி.ஓ.,விடம் விண்ணப்பித்தனர்.மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மாறுதலுக்கான ஆணை பிறப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதில், ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு உள்ளதால், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மாறுதல் வழங்க தயக்கம் காண்பிக்கின்றனர். எனவே, விரைந்து பணி மாறுதல் வழங்க, கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.