மீண்டும் கட்சி மாறுவாரா யோகேஸ்வர்?
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர் அமைதியாக காணப்படுகிறார். ராம்நகரின் சென்னப்பட்டணா, ஹாவேரியின் ஷிகாவி, பல்லாரியின் சண்டூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு, கடந்த ஆண்டு நவம்பரில் இடைத்தேர்தல் நடந்தது. மூன்று தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னப்பட்டணாவில், மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த யோகேஸ்வர் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ., ஆகும் ஆசையில், எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அவர் நினைத்தது போன்று எம்.எல்.ஏ., ஆகிவிட்டார். எம்.எல்.ஏ., ஆனதும், தனக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்றும் கணக்கு போட்டிருந்தார். துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷுடன் அதிக நெருக்கம் காண்பித்தார். நினைத்தது கூடி வரவில்லை. இதனால் கடந்த ஆறு மாதங்களாக, சத்தமே இன்றி யோகேஸ்வர் அமைதியாகி உள்ளார். சிவகுமாருடனும் அதிகம் தென்படுவது இல்லை. கடந்த மாதம் பெல்ஜியம் சுற்றுலா சென்றிருந்த யோகேஸ்வர், அங்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா திரும்பிய பின்னரும், ரமேஷ் ஜார்கிஹோளியை சந்தித்தது பற்றி, யோகேஸ்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. ஏதோ ஒரு விஷயத்திற்காக, அவர் காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது மவுனம் பல சந்தேகங்களுக்கு வழி வகுத்துள்ளது. மீண்டும் அவர் கட்சி மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம் வரை அவர் பொறுமையுடன் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -