உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஷிவமொக்கா மருத்துவமனையில் மகளிர் ஆணைய தலைவி ஆய்வு

 ஷிவமொக்கா மருத்துவமனையில் மகளிர் ஆணைய தலைவி ஆய்வு

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று மெக்கான் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி: மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தேன். குழந்தை பிரசவித்த பெண்களிடம் நலம் விசாரித்து, பிரச்னைகளை கேட்டறிந்தேன். பிரசவ பிரிவிலும், குழந்தைகள் வார்டிலும் பணம் பெறுவதாக புகார்கள் வந்தன. தாய்களிடம் குழந்தையை காட்டும்போது, மருத்துவ ஊழியர்கள் பணம் கேட்கின்றனரா என, நான் விசாரித்தேன். தாங்கள் பணம் கொடுக்கவில்லை என, அவர்கள் கூறினர். ஆனால் மருத்துவ ஊழியர்கள், வார்டுக்கு வெளியே உள்ள உறவினர்களிடம் ஆண் குழந்தைக்கு 2,500 ரூபாயும், பெண் குழந்தைக்கு 1,500 ரூபாய் பெறுவதும் தெரிய வந்தது. டாக்டர்கள் மீது பெண்கள் எந்த புகாரும் கூறவில்லை. சிகிச்சைக்காக, பரிசோதனைக்காக நோயாளிகள் வெளியே நீண்ட நேரம் காத்திருப்பதை பார்க்கும்போது, வருத்தம் அளிக்கிறது. ஏழு, எட்டு, ஒன்பது மாத கர்ப்பிணியர், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை டோக்கனுக்காக வரிசையில் நிற்கின்றனர். தாய், சேய் மருத்துவமனைகளில் டோக்கன் வழங்க குறைந்தபட்சம், 10 கவுன்டர்கள் இருக்க வேண்டும். கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தையை வைத்துள்ள பெண்கள் இதுபோன்று காத்திருக்கக்கூடாது. ஒரு தாயாக, மகளிர் ஆணைய தலைவியாக என்னால் சகிக்க முடியாது. கூடுதல் கவுன்டர் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன். குழந்தை பிரசவித்த பெண்களுக்கு குடிநீர், சுடுநீர் என அனைத்தும் கிடைக்கின்றன. இந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் சரியாக ஊதியம் கிடைப்பது இல்லை. பி.எப்., - இ.எஸ்.ஐ., வசதி கிடைப்பதில்லை என, என்னிடம் கூறினர். ஊதியம், பி.எப்., - இ.எஸ்.ஐ., தராத நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் எத்தனை பிரசவங்கள் நடக்கின்றன, இதில் சுகப்பிரசவம், ஆப்பரேஷன் எத்தனை என்பது குறித்து, தகவல் கேட்டறிந்தேன். அறுவை சிகிச்சை அறையை சுத்தமாக, சுகாதாரமாக நிர்வகிக்கும்படி உத்தரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ