உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உண்டு உறைவிட பள்ளி உணவில் கிடந்த புழுக்கள்

உண்டு உறைவிட பள்ளி உணவில் கிடந்த புழுக்கள்

பெங்களூரு: கித்துார் ராணி சென்னம்மா உண்டு உறைவிட பள்ளியில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவில் பெருமளவில் புழுக்கள் காணப்பட்டதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின் தெலகரஹள்ளியில் கித்துார் ராணி சென்னம்மா உறைவிட பள்ளி உள்ளது. இதில், 340க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர். உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவதாக அரசு கூறுகிறது. ஆனால், பல பள்ளிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை. அழுகிய காய்கறிகள், கெட்டுப்போன முட்டை, காலாவதியான மசாலா பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரித்து, பள்ளி சிறார்களுக்கு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே போல, கித்துார் ராணி சென்னம்மா உண்டு உறைவிட பள்ளியில் வழங்கும் உணவிலும் புழுக்கள் காணப்பட்டன. பள்ளியில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட உணவில், அதிகமான புழுக்கள் காணப்பட்டன. இதை பார்த்து வெறுப்படைந்த மாணவ, மாணவியர், இரவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீரும் இல்லை; அடிப்படை வசதிகளும் இல்லை என்றனர். மாணவர்களின் போராட்டத்தை அறிந்த அதிகாரிகள், பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் பின், போராட்டம் கைவிடப்பட்டது. உண்டு உறைவிட பள்ளிகள் சங்கத்தின் இணை இயக்குநர் ரங்கே கவுடா, சமூக நலத்துறை அதிகாரிகளும் பள்ளியை ஆய்வு செய்தனர். உயர் அதிகாரிகள், உறைவிட பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உணவில் புழுக்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, உண்டு உறைவிட பள்ளி முதல்வர் ராமண்ணா நேற்று, வார்டன் மஹாதேவியை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி