ராமேஸ்வரம் கபே உணவில் புழு? ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல்
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ராமேஸ்வரம் கபேயில், வாடிக்கையாளருக்கு வழங்கிய வெண்பொங்கலில் புழு இருப்பதாக கூறி, பணம் பறிக்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், 'ராமேஸ்வரம் கபே' உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை 5 முதல் 7 பேர் உணவு ஆர்டர் செய்தனர். இதில், ஒருவர் வெண்பொங்கல் ஆர்டர் செய்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட வெண்பொங்கலில் புழு இருப்பதாக ஊழியர்களிடம் முறையிட்டார். அவர்கள், புழுவை அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது உணவு ஆர்டர் செய்தவர்கள், மொபைல் போனில் வீடியோ எடுக்க துவங்கினர். உடனடியாக ஊழியர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை மறுத்து, ஹோட்டல் தரப்பில் திவ்யா ராகவ் கூறியதாவது: நாங்கள் பரிமாறிய உணவில் புழு அல்லது பூச்சி இருந்தது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. எங்கள் கடைக்கு வந்த 5 முதல் 7 பேர், உணவில் புழு இருப்பதாக பொது மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தினர். இழப்பீடு தராவிட்டால், சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிடுவோம் என்று மிரட்டினர். சிறிது நேரத்துக்கு பின், 25 லட்சம் ரூபாய் வேண்டும் என்று எங்களுக்கு மொபைல் போன் அழைப்பு வந்தது. இது தொடர்பாக, பெங்களூரு விமான நிலைய போலீஸ் நிலையத்தில், பணம் கேட்டு மிரட்டியவரின் எண் உட்பட தகவல்கள் கொண்ட புகார் அளித்து உள்ளோம். பணத்துக்காக மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.