உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முன்பகையால் நண்பரை கொன்ற வாலிபர் கைது

 முன்பகையால் நண்பரை கொன்ற வாலிபர் கைது

பெங்களூரு: முன்பகை காரணமாக, 'சமரசம் செய்து கொள்ளலாம்' என அழைத்து, கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கே.ஜி.ஹள்ளியைச் சேர்ந்தவர்கள் அர்ஜூன், 30, பழனி. இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சிறு சிறு விஷயங்களுக்காக இருவருக்குள் அடிக்கடி சண்டை நடந்தது. கடந்தாண்டு பழனியின் திருமணத்துக்கு சென்ற அர்ஜுன், ரகளையில் ஈடுபட்டார். இது தொடர்பாக கே.ஜி.ஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவானது. இதனால் அர்ஜுன் அமைதியாகி, எந்த ரகளையும் செய்யாமல் இருந்து வந்தார். ஆனாலும், அர்ஜுன் மீது கோபத்தில் இருந்த பழனி, நேற்று முன்தினம், சமரசம் செய்து கொள்ளலாம் என்று கூறி, கே.ஜி.ஹள்ளியில் உள்ள ரயில்வே கேட் அருகே வரும்படி அழைத்தார். அதன்படி அங்கு சென்ற அர்ஜுனை, பழனியும், அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து அரிவாள், கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கினர். அத்துடன், அவர் தலை மீது கல்லை போட்டு கொன்றுவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்த கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்