11 மாதத்தில் 15,547 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள்
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், யு.பி.ஐ., செயலி வாயிலாக, 223 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 15,547 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துஉள்ளது. மேலும் யு.பி.ஐ.,யின் பயன்பாடு பிரான்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் என்.பி.சி.ஐ., அமைப்பால் உருவாக்கப்பட்ட யு.பி.ஐ., நாட்டின் பணப் பரிவர்த்தனை கட்டமைப்பையே மாற்றிஉள்ளது. தற்போது வரை 632 வங்கிகள் யு.பி.ஐ., கட்டமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டுஉள்ளன.விரைவாக பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யும் அதே வேளையில், பாதுகாப்பையும் உறுதி செய்வதால், பல்வேறு நாடுகளும் இதனை பின்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்தாண்டு நிலவரப்படி, உலகில் மேற்கொள்ளப்படும் உடனடி பணப் பரிவர்த்தனைகளில் 49 சதவீதம் இந்தியாவில் நடப்பதாக 'ஏ.சி.ஐ., உலக அறிக்கை 2024' என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. பிற நாடுகளில்... ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிங்கப்பூர் பூட்டான் நேபாளம் இலங்கை பிரான்ஸ் மொரீஷியஸ்