| ADDED : ஜன 19, 2024 10:28 PM
மும்பை:'வரும் ஜன. 22 அன்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது' என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.நாடு முழுதும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு பணமான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின்னர் அனைத்து தேசிய வங்கிகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. அது முடிவடைந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கிளைகளில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தவும், மாற்றவும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மத்திய அரசு அறிவித்துள்ள அரை நாள் விடுமுறை காரணமாக, வரும் 22ம் தேதி காலை ரிசர்வ் வங்கி செயல்படாது-.ஆகையால், ரிசர்வ் வங்கி மற்றும் அதன் 19 அலுவலகங்களில், அன்றைய தினம் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தவோ, மாற்றவோ முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படும் அறிவிப்பு வெளியான போது, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அது 9,330 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு டிச. 29ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளன.