பணக்கொள்கை குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவின் புதிய உறுப்பினர்களாக, ராம் சிங், சவுகதா பட்டாச்சார்யா, நாகேஷ் குமார் ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான குழு இவர்களை பரிந்துரை செய்ததை அடுத்து, பிரதமர் மோடி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சிங், 'டில்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்வி நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். நாகேஷ் குமார், தொழில் வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குனராகவும்; தலைமை நிர்வாகியாகவும் உள்ளார். சவுகதா பட்டாச்சார்யா பொருளாதார நிபுணர். ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழுவில், மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதில், ரிசர்வ் வங்கி கவர்னர் உட்பட மூன்று அதிகாரிகளும்; மத்திய அரசு நியமனம் செய்யும், ரிசர்வ் வங்கியை சாராத மூன்று நிபுணர்களும் இருப்பர். அரசால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள். ஏற்கனவே இந்த பொறுப்பை வகித்து வந்த மூன்று உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 7 முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள பணக் கொள்கை குழு கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.