செல்வ வளத்தை உருவாக்கி கொள்ள திட்டமிட்டு முதலீடு செய்வது முக்கியமானது. தகுந்த நிதி சாதனங்களை தேர்வு செய்வது, முதலீடு காலத்தை தீர்மானிப்பது என பல விஷயங்களை முதலீடு உத்தியை தீர்மானிக்கும் போது யோசிக்க வேண்டும். இடர் அம்சத்திலும் கவனம் செலுத்த வேண்டும். முதலீடு மூலமான பலனை அதிகரிப்பதற்கான உத்திகளையும் பின்பற்ற வேண்டும். சரியான வழிகளை நாடுவதோடு, முதலீடு தொடர்பாக பரவலாக செய்யப்படும் தவறுகளையும் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய ஐந்து முக்கிய தவறுகளை பார்க்கலாம்.நேரடி பங்கு முதலீடு:
பங்கு முதலீடு அதிக பலன் தரக்கூடியது. ஆனால், போதிய அனுபவம் இல்லாமல் நேரடி பங்கு முதலீட்டில் ஈடுபடுவது தவறு. முழுமையாக ஆய்வு செய்து ஒரு பங்கை வாங்கும் ஆற்றல் இருந்து, அதன் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிக்கும் திறன் இருந்தால் மட்டுமே நேரடி முதலீட்டை நாட வேண்டும்.விரிவாக்க உத்தி:
சில்லரை முதலீட்டாளர்களை பொருத்தவரை பங்குகளில் முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட்கள் சிறந்த வழி. எந்த முதலீடாக இருந்தாலும், விரிவாக்கம் வலியுறுத்தப்படுகிறது. எனினும் மிகை விரிவாக்கத்தை தவிர்க்க வேண்டும். பங்குகளோ, நிதிகளோ அதிகமானவை இருப்பது சரியல்ல.காப்பீடு நோக்கம்:
காப்பீடு பாதுகாப்பு முக்கியம். ஆனால், காப்பீடு பாலிசிகளை தேர்வு செய்யும் போது, அவை அளிக்கும் பாதுகாப்பு அம்சத்தை முதன்மையாக கருத வேண்டும். வரி சேமிப்பு நோக்கில் காப்பீடு பாலிசி வாங்குவது, முதலீடு பலன், காப்பீடு பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும்.
அவசரகால நிதி:
முதலீட்டை திட்டமிடும் போது, எதிர்பாராத செலவுகள் மற்றும் இதர நிதி அவசர தேவைகளை மனதில் கொள்ள வேண்டும். இத்தகைய நெருக்கடிகளுக்கான அவசர கால நிதியை உருவாக்கி கொள்ள மறக்கக் கூடாது. இல்லை எனில் அவசர தேவைகளின் போது முதலீட்டில் கைவைக்கும் நிலை வரலாம்.கடன் சுமை:
கடன் தேவை மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். அதிக கடன் சுமை நிதி பொறுப்புகளை பாதிக்கலாம். கிரெடிட் கார்டு மிகை பயன்பாடும் பாதகமானது. அதோடு, கிரெடிட் கார்டு மற்றும் வங்கி அறிக்கைகளையும் கவனமாக பார்வையிட வேண்டும்.