யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் அக்டோபரில் புதிய உச்சம்
புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு, மக்களின் நுகர்வு அதிகரித்ததே, பரிவர்த்தனைகள் அதிகரிக்க காரணமாக அமைந்தது.யு.பி.ஐ., வாயிலாக, கடந்த மாதம் 23.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட 1,504 கோடி பரிவர்த்தனைகளும்; மதிப்பின் அடிப்படையில் ஜூலையில் மேற்கொள்ளப்பட்ட 20.64 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனைகளுமே அதிகபட்சமாக இருந்து வந்தது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10 சதவீதமும்; மதிப்பு 14 சதவீதமும் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 53.50 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகளும்; அவற்றின் மதிப்பு 75,801 கோடி ரூபாயாகவும் இருந்தன. இதற்கிடையே, அக்டோபர் மாதத்தில், ஐ.எம்.பி.எஸ்., பாஸ்டேக் மற்றும் ஏ.இ.பி.எஸ்., எனும் ஆதார் பேமென்ட்ஸ் முறை வாயிலான பரிவர்த்தனைகளும் அதிகரித்தன.