உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்தில் ஓராண்டில் 269 ஸ்டார்ட் அப் மூடல்

தமிழகத்தில் ஓராண்டில் 269 ஸ்டார்ட் அப் மூடல்

சென்னை:தமிழகத்தில் கடந்த ஓராண்டில், 269 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.மத்திய, மாநில அரசுகள், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் துவங்க, நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை செய்கின்றன. இதனால், படித்த இளைஞர்கள் தனியாகவும், நண்பர்களுடன் இணைந்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கி வருகின்றனர். மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே, அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக கருதப்படுகின்றன. தற்போது, தமிழகத்தில் உள்ள 10,399 நிறுவனங்கள் உட்பட, நாடு முழுதும் மொத்தம் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழிலில் போதிய அனுபவமின்மை, வாடிக்கையாளரின் தேவை அறிந்து தொழிலை துவக்காதது, ஏற்கனவே சந்தையில் உள்ள பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டது, தயாரிப்பை சரியான முறையில் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஸ்டார்ட் நிறுவனங்கள் பல நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதனால், அந்நிறுவனங்கள் விரைவில் மூடப்படுகின்றன. அதன்படி, 2024ல் நாடு முழுதும், 5,063 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில், தமிழகத்தில் 269 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகம் இருப்பதில், தமிழகம் முன்னணி வரிசையில் உள்ளது. அந்நிறுவனங்களை மூடுவதில் தமிழகம் கடைசியில் உள்ளது. ஒரு நிறுவனம், வாடிக்கையாளருக்கு எது தேவை, தேவை இல்லை என்பதை அறிந்து தொழில் துவங்க வேண்டும். தனித்துவ அடையாளத்துடன் திகழ வேண்டும். எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட தேவையான சந்தை வாய்ப்பு, முதலீடு உள்ளிட்ட உதவிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மூடப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ