உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய மசாலா பொருட்களுக்கு தடை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

இந்திய மசாலா பொருட்களுக்கு தடை: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி : இந்தியாவைச் சேர்ந்த எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் பிராண்டுகளின் நான்கு மசாலா பொருட்களின் விற்பனைக்கு, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் விதித்துள்ள தடை குறித்து ஆய்வு செய்து வருவதாக, இந்திய மசாலா வாரியம் தெரிவித்துள்ளது.இந்த மசாலா பொருட்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேலாக, 'எத்திலீன் ஆக்சைடு' என்ற பூச்சிக்கொல்லியைக் கொண்டிருப்பதாகக் கூறி, இதை வாங்கவோ, விற்கவோ கூடாது என ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நாட்டின் உணவு ஆணையமும் இப்பொருட்களை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து வருவதாக இந்திய மசாலா வாரியத்தின் இயக்குனர் ரெமா ஷ்ரீ தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாத துவக்கத்தில், ஹாங்காங்கின் உணவு பாதுகாப்பு மையம், அதன் வழக்கமான உணவு கண்காணிப்பு நடவடிக்கையின்போது, மூன்று சில்லரை விற்பனை நிலையங்களில் இருந்து எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் மசாலா பொருட்களின் மாதிரியை சேகரித்துள்ளது. பின்பு இதை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. அப்போது இந்த இரண்டு இந்திய பிராண்டுகளின் பேக்கேஜ் செய்யப்பட்ட பல்வேறு மசாலா கலவை தயாரிப்புகளின் மாதிரிகளில், எத்திலீன் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி அதிகம் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த மையம் தெரிவித்திருந்தது. புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம், எத்திலீன் ஆக்சைடை புற்றுநோய் உருவாக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளதாக, ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் தெரிவித்தது.இதனால் விற்பனையாளர்கள், இப்பொருட்களின் விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்டது. மீறுவோருக்கு 50,000 அமெரிக்க டாலர்களும், 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஹாங்காங்கின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இதே காரணங்களை சுட்டிக்காட்டி, சிங்கப்பூர் உணவு ஆணையமும் எவரெஸ்ட் மீன் கறி மசாலாவை திரும்பப் பெறுமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த இரண்டு பிராண்டுகள் உட்பட இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மசாலா பிராண்டுகளின் தயாரிப்புகளையும் ஆய்வு செய்யத் துவங்கியுள்ளதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த எம்.டி.எச்., மற்றும் எவரெஸ்ட் பிராண்டுகளின் நான்கு மசாலா பொருட்களின் விற்பனைக்கு, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் தடை விதித்துள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ