சூரிச்: சுவிட்சர்லாந்து என்றவுடன், உடனடியாக பெரும்பாலோரின் நினைவுக்கு வருவது, அங்குள்ள பனிபடர்ந்த மலைகளும், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரும் தான். ஆனால், இவை தவிர, உலகளவில் அந்நாட்டை பிரபலப்படுத்தியதில், மற்றொரு பொருளுக்கும் பெரும் பங்கு உண்டு. 'ஸ்விஸ் ஆர்மி நைவ்ஸ்' என பிரபலமாக அழைக்கப்படும், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும், கத்தி கொத்து. இதில் கத்தி, பிளேடு, ஓப்பனர்கள், ஸ்க்ரூ டிரைவர்கள் என பல்வேறு பயன்பாட்டுக்கான கருவிகள் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகின்றன. கடந்த 1884ம் ஆண்டு 'மெஸ்ஸர் பேப்ரிக்' என்ற நிறுவனத்தை, கார்ல் எல்செனர் என்பவர், சுவிட்சர்லாந்தில் துவங்கினார். பின்பு இந்நிறுவனம், 'விக்டோரினாக்ஸ்' என பெயர் மாற்றம் பெற்றது. இதற்கிடையே நிறுவனம், அதன் தயாரிப்பில் வெளிவரும் கத்திகளுக்கான காப்புரிமையை கடந்த 1897ம் ஆண்டே பெற்றது. இந்நிறுவனத்தின் கத்திகள், நன்கு கடினப்படுத்தப்பட்ட உருக்கால் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சுவிட்சர்லாந்து ராணுவத்திற்கு பல்வகைப் பயன்பாடுக்கான கத்திகள் முழுதையும், இந்நிறுவனம் மட்டுமே வழங்கி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் காரணமாக, அவசிய தேவையுள்ளோர் மட்டுமே, கத்தி கொத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அவசியமாக கருதப்படாத வேறு பிற தேவைகளுக்காக, விக்டோரினாக்ஸ் தயாரிப்பை தங்களுடன் எடுத்துச் செல்ல விரும்புவோர், அதை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, பிளேடு இல்லாமல், மற்ற பிற தேவைகளை உள்ளடக்கிய கத்தி கொத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக, விக்டோரினாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.