| ADDED : ஆக 13, 2024 06:43 AM
புதுடில்லி : பெட்ரோலை தொடர்ந்து, டீசலிலும் எத்தனாலை கலக்க மத்திய அரசு திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு தற்போது பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது 15 சதவீதத்தை தாண்டியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் இதை 20 சதவீதமாக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தற்போது டீசலிலும் 5 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தை அரசு மதிப்பீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான முன்மொழிவு கூட்டம், கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங் களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வாகனத்தின் செயல்திறன், உமிழ்வு மற்றும் எத்தனால் கலந்த டீசலின் ஆயுள் உள்ளிட்டவற்றை மதிப்பிடுவதற்காக, 2018 - 19ம் ஆண்டில், பி.எஸ்., 3 மற்றும் பி.எஸ்., 4 வகை பேருந்துகளில், 500 மணி நேர சோதனை ஓட்டத்தை, ஏ.ஆர்.ஏ.ஐ., எனப்படும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் நடத்தியது. இருப்பினும், பி.எஸ்., 4ஐ சேர்ந்த பிற வாகனங்களில், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று, எரிபொருள் சோதனையை விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.