| ADDED : ஜூன் 04, 2024 06:50 AM
புதுடில்லி: 'கேம்பஸ் இண்டர்வியூ' நடத்தி, தேர்வு கடிதம் வழங்கப்பட்டவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் பணி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இன்போசிஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, என்.ஐ.டி.இ.எஸ்., எனும் தகவல் தொழில்நுட்ப தொழிற்சங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், தேர்வு செய்த 2,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணி வழங்கவில்லை. இதன் காரணமாக, பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், நிதி பிரச்னை மற்றும் வேலை பற்றிய நிச்சயமற்ற தன்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.இன்போசிஸ் நிறுவனத்தின் தேர்வு கடிதத்தை நம்பி, பலர் புதிய வேலை வாய்ப்புகளை நிராகரித்ததாகவும், நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் நம்பிக்கையை மீறும் வகையில் உள்ளதாகவும், தொழில்நுட்ப தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இன்போசிஸ் மீது மட்டுமின்றி; பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதும் அண்மைக் காலமாக, இத்தகைய புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.