சென்னை : தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில், 500 கோடி ரூபாய் மதிப்பில், 100 குழந்தையின்மை சிகிச்சை மையங்களை பிர்லா குழுமம் துவங்குகிறது.கேரளா, தமிழகத்தில் செயல்பட்டு வரும், ஏ.ஆர்.எம்.சி., --- ஐ.வி.எப். குழந்தையின்மை சிகிச்சை மையத்தை, பிர்லா குழந்தையின்மை சிகிச்சை மற்றும் ஐ.வி.எப்., மையம் கையப்படுத்தி உள்ளது. இதைதொடர்ந்து, தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில், 500 கோடி ரூபாய் மதிப்பில், 100 குழந்தையின்மை சிகிச்சை மையங்கள் துவங்கப்படும் என, பிர்லா குழுமம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, 'சி.கே. பிர்லா ஹெல்த்கேர்' நிறுவனர் அவந்தி பிர்லா கூறியதாவது:எங்களது குழந்தையின்மை சிகிச்சை மையங்கள், குழந்தை இல்லாத தம்பதியருக்கு சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, கருவுறுதல் சிகிச்சைக்கான சிறப்பு நிபுணர்கள், இனப்பெருக்க சிகிச்சை நிபுணர்கள் என, பல்வேறு மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். ஏ.ஆர்.எம்.சி., மற்றும் ஐ.வி.எப்., குழந்தையின்மை மையத்தை நாங்கள் கையகப்படுத்தியிருப்பதன் வாயிலாக, கருவுறுதல் தொடர்பான மருத்துவ சிகிச்சையை இன்னும் மேம்பட்ட முறையில் வழங்க முடியும்.மேலும், குழந்தைபேறு இல்லாத தம்பதியரின் தேவையை பூர்த்தி செய்ய, 500 கோடி ரூபாய் முதலீட்டில், 100 கிளினிக்குகள், தென்மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.இவ்வாறு கூறினார்.