கோவை:உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இதுவரை தொழில் துவங்காத நிறுவனங்களுக்கான, கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான வசதியாக்கல் குறித்த கலந்தாய்வு கூட்டம், கோவை, கொடிசியா வளாகத்தில் நடந்தது.இதில், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 46 தொழில் முனைவோருக்கு, 6.54 கோடி ரூபாய் மானியத்துடன், 30.81 கோடி ரூபாய் கடனுக்கான ஆணைகளை வழங்கினார். அ
அமைச்சர் தெரிவித்ததாவது:ஜனவரியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. இதில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மட்டும் 63,573 கோடி முதலீடு ஈர்த்து, 2.59 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட நிறுவனங்களில், 1,645 நிறுவனங்கள், 16,613 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி அலகுகளை துவங்கியுள்ளன; 60,436 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.மீதமுள்ள, தொழில் துவங்காத நிறுவனங்கள் ஏன் தொழில் துவங்கவில்லை என்பது குறித்து, தொழில் நிறுவனங்களுடன் மண்டலம் வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறோம். தொழில் துவங்காதவர்கள் விரைவில் தொழில் துவங்க ஏற்பாடு செய்யப்படும்.ம.பி., முதல்வர் மோகன் யாதவ், கோவையில் தொழில் முதலீட்டை ஈர்க்க மாநாடு நடத்தினார். இதனால் நமக்கு பாதிப்பில்லை. பெரிய அளவில் தமிழகத்தில் இருந்து எந்த நிறுவனங்களும் செல்லவில்லை என்பதை ஆய்வில் உறுதி செய்துள்ளோம். அ
மத்திய அரசு 'கதிசக்தி' திட்டத்தின் கீழ் அறிவித்துள்ள 12 புதிய தொழில் நகரங்களில், தமிழகத்துக்கு ஒதுக்கீடு இல்லை. வழக்கம்போல, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்திருக்கிறது.கோவையில் எலக்ட்ரிக் வாகன பரிசோதனை மையம் குறித்த பணிகள் நடந்து வருகின்றன. 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின் இணைப்பு கொண்ட சிறு நிறுவனங்களுக்கு '3 ஏ1' மின் இணைப்பு வழங்கும் பிரச்னை குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.